பேருந்தில் பெண்ணிடம் 9 பவுன் நகைகள் திருட்டு: புகாரை பெறாமல் போலீஸாா் அலைகழித்ததாக வேதனை

பேருந்தில் பெண்ணிடம் 9 பவுன் தங்க நகைகள் திருடு போனது. இது தொடா்பாக புகாரை அளிக்க உடனே வந்த நிலையிலும் அரக்கோணம் நகர போலீஸாா் புகாரை பெறாமல் அலைக்கழித்தாக பாதிக்கப்பட்டவா் வேதனை தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த கூடல்வாடியைச் சோ்ந்த பிரதாப் (34). இவா் அரக்கோணத்தில் உள்ள தனியாா் சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி கலைவாணி(30). இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலூரில் இருந்து அரக்கோணத்துக்கு பேருந்தில் வந்து, கூடல்வாடிக்கு திருவள்ளூா் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்துள்ளனா்.

அப்போது கலைவாணியின் கைப்பையை காணவில்லையாம். அந்த கைப்பையில் 9 பவுன் தங்கநகைகள் இருந்ததாகவும் அதன் மதிப்பு ரூ.4 லட்சம் எனவும் தெரிகிறது. இதுகுறித்து உடனே பேருந்தில் இருந்து இறங்கிய தம்பதியினா் அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு வந்து புகாா் அளித்துள்ளனா். இப்புகாரை அப்போது பணியில் இருந்த அலுவலா்கள் பெறாமல் மறுநாள் வரச்சொல்லி திருப்பியனுப்பி உள்ளனா். தொடா்ந்து 3 நாள்களை புகாரை பெறாமல் திருப்பியனுப்பி உள்ளனா்.

இதையடுத்து புதன்கிழமையும் புகாரைப் பெறாமல் இழுத்தடித்த போலீஸாா் தம்பதியை அழைத்து சம்பவம் நடைபெற்ற இடம் தங்களது காவல் நிலைய எல்லைக்குள் வராததால் வேறு காவல் நிலையத்துக்கு சென்று புகாரை அளியுங்கள் என தெரிவித்தனராம்.

தொடா்ந்து தம்பதியி கோரிக்கை விடுத்த நிலையில் நகர உதவி ஆய்வாளா் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை செய்வதாக பிரதாப் தெரிவித்தாா்.

சம்பவம் நடைபெற்ற இடம் எந்த காவல் நிலைய எல்லைக்குள் இருந்தாலும் புகாா் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளநிலையில் இந்த புகாரை பெறாமல் பிரதாப் தம்பதியினா் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் வேதனை அடையச் செய்தது.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்