பேல் பூரி

பேல் பூரிபேல் பூரி: நகைச்சுவை மற்றும் நிதானம் கலந்த கதைகள்

கண்டது

(திருவண்ணாமலை அருகேயுள்ள ஓர் ஊராட்சியின் பெயர்)

'ஆணாய்பிறந்தான் ஊராட்சி''

-கொடுங்கையூர் மு.நவீன், சென்னை.

(தருமபுரி சுவரில் எழுதியிருந்த வாசகம்)

'உங்களைச் சிந்திக்கவிடாது; செயல்படவிடாது.

முதலில் உங்களை அழிக்கும். பிறகு உங்கள் குடும்பத்தை அழிக்கும்.

போதையைக் கற்றுகொள்ளாதீர்.

-மா.பழனி, கூத்தம்பாடி.

(சேலம் மாநகரில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'இளம்பிள்ளை''

-பொறிஞர் ப.நரசிம்மன், திருச்சி.

கேட்டது

(கோவையில் உள்ள ஒரு மின்வாரிய அலுவலகத்தில் ஊழியரும், வாடிக்கையாளரும்..)

'சார். வாரத்தில் ஒரு நாள் என் வீட்டுக்கு பவர் கட் பண்ணுங்க?''

'ஏன்? என்ன பிரச்னை…''

'என் மனைவி தினமும் டி.வி.யில் சீரியல் பார்த்து கடுப்பேத்துறா? ஒரு நாளாவது நிம்மதி வேணும் சார்..''

-அ.செந்தில்குமார், சூலூர்.

(கோவை பேருந்து நிலையத்தில் இருவர்..)

'குடிச்சிட்டு வீட்டுக்குப் போகாம ஏன் இங்கே உட்கார்ந்திருக்கீங்க?''

'குடிச்சா வீட்டுக்கு வர வேண்டாமுன்னு என் மனைவி சொல்லிட்டாங்க.. அதான்.''

-மணியட்டிமூர்த்தி, கோவை.

(நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்தில் நடத்துநரும் பயணியும்..)

'என்னண்ணே.. "புஷ் பேக்' பாதிதான் போகுது. மற்ற பஸ்கள் நல்லா போகுமே..''

'டிக்கெட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம் வாங்கும் பஸ்ஸில் போகும். இதுல அவ்வளவுதான்…''

'அப்போ நானூறு ரூபாய்க்கு பின்னால போகுமுன்னு சொல்றீங்கதானே..''

-மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான்விளை.

யோசிக்கிறாங்கப்பா!

செல்வம் வரும்போது ஒற்றைக் காலில் கூட வரும்.

போகும்போது பல கால்களில் போகும்.

-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

மைக்ரோ கதை

அலுவலகம் முடிந்து அலுப்போடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் மகேஷ். கைப்பேசி அலறியதால், பைக்கை நிறுத்தி பேசினான்.

'என்ன உமா?''

'ஊரில் இருந்து தம்பி குடும்பத்தோடு வந்திருக்காங்க? தோசை மாவு காணாது. ஏதாவது டிபன் வாங்கிட்டு வாங்க?''

'ஆபிஸ் வேலையா வெளியே போயிட்டு வர்றேன். வர்ற நேரமாகும். இருப்பதை வெச்சி சமாளி..''

'பழைய சோறும், ஊறுகாயும்தாங்க இருக்கு..''

'இருப்பதை வெச்சி சமாளின்னு சொன்னேன்ல..'' என்று கூறிய மகேஷ், போன மாதக் கடைசி நாள்களில் உமாவின் தம்பி குடும்பத்தோடு வந்து தங்கிவிட்டு போனதால் ஏற்பட்ட செலவை நொந்துகொண்டான்.

"இந்த மாதமும் வந்துவிட்டானா?' என்று நொந்துகொண்டே வேண்டுமென்றே நேரம் கழித்து வீடு திரும்பினான் மகேஷ்.

படாரென கதவைத் தள்ளி உள்ளே நுழைந்த மகேஷின் கைகளை பற்றிய அவனது தம்பி சுரேஷ், 'என்ன அண்ணே.. இவ்வளவு லேட்டு'' என்று அன்பாய் கேட்டான். சுரேஷ் திகைத்துநின்றான்.

-இரா.சிவானந்தம், கோவில்பட்டி.

எஸ்எம்எஸ்

வாழ்க்கையில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

ஆனால் யாரையும் நம்பித்தான் இருக்கக் கூடாது.

-எஸ்.மாரிமுத்து, சென்னை.

அப்படீங்களா!

பொழுதுபோக்குக்காகத் தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய சேவைகள் அவ்வப்போது அறிமுகமாகி வருகிறது. இதனால் தகவல் பரிமாற்றத்தில் உலகத்தில் முதலிடத்தில் வாட்ஸ் ஆப் உள்ளது.

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ் ஆப்பில் மேலும் ஒரு புதிய சேவையாக செயற்கை நுண்ணறியை-ஏஐ மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாட்ஸ்ஆப்பை விட்டு வெளியேறாமல் அனைத்துவிதமான தகவல்களைப் பெற முடியும்.

வாட்ஸ் ஆப் சாட் அருகே இருக்கும் நீல நிற வட்ட வடியை தேர்வு செய்தால் மெட்டா ஏஐ சாட்பாட்டை தொடங்கி விடலாம். வழக்கமான சாட்டைப்போல் திறக்கும் இதில், நமக்கு தேவையான தகவலை, தேவையன அளவில் பதிவிட்டு பெறலாம். கூகுள் தேடலில் சென்று பல்வேறு தகவல்களை தேடுவதற்கு பதில், வாட்ஸ்ஆப்பில் இருந்தபடியே அனைத்துவிதமான தகவல்களைப் பெறலாம்.

குழுவிலும் இந்த ஏஐ சாட்போட்டை பயன்படுத்தலாம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா உள்பட 12 நாடுகளில் மெட்டா ஏஐ இலவசமாக கிடைக்கிறது. பேஸ்புக், மெசேஞ்சர், இன்ஸ்டாகிராமிலும் இந்த மெட்டா ஏஐ சாட்பாட் அறிமுகமாக உள்ளது.

இதில், எழுத்துவிடவில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள் வடிவில் தேடவும், தேவைக்கு ஏற்ப ஏஐ புகைப்படங்களை உருவாக்கும் சேவையும் இதில் விரைவில் அறிமுகமாக உள்ளது.

-அ.சர்ப்ராஸ்

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து