‘பொட்டு, திலகம் இடாதீர்கள் என்று கூற முடியுமா?’ – ஹிஜாப் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் மத அடையாளத்திற்கு தொடர்புடைய ஹிஜாப், நகாப், புர்கா, தொப்பி உள்ளிட்டவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி சம்பந்தப்பட்ட கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.

பின்னர் இது தொடர்பாக மும்பை பல்கலைக்கழகத்தின் வேந்தர், துணை வேந்தர் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் மாணவிகள் மனு அளித்தும் பதில் கிடைக்காததால், சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு படித்து வரும் 9 மாணவிகள் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நீதிபதி ஏ.எஸ்.சந்துர்கர் மற்றும் நீதிபதி ராஜேஷ் பட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த ஜூன் 26-ந்தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவில் கோர்ட்டு தலையிட முடியாது என்று கூறி, மாணவிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கல்லூரி எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாதவி திவான், கடந்த 2008-ம் ஆண்டு முதல் கல்லூரி செயல்பட்டு வருவதாக கூறினார். இதையடுத்து நீதிபதிகள், "இத்தனை ஆண்டுகளாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஆனால் தற்போது திடீரென மதம் இருப்பதை உணர்ந்துவிட்டீர்களா?" என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், "பொட்டு, திலகம் இடாதீர்கள் என்று உங்களால் கூற முடியுமா?" என்று நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா கேள்வி எழுப்பினார். இதற்கு வழக்கறிஞர் மாதவி திவான், 441 இஸ்லாமிய மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியாக கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், ஒருசில மாணவிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும் கூறினார்.

இதற்கு நீதிபதி சஞ்சய் குமார், "ஒரு பெண் என்ன உடை அணிய விரும்புகிறார் என்பது அவரது சொந்த விருப்பம் இல்லையா? பெயர் மூலம் ஒருவரின் மதம் வெளிப்பட்டுவிடாதா? பெயர்களுக்கு பதிலாக எண்களை வைத்து அடையாளம் காணப்போகிறீர்களா?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மாணவர்கள் ஒன்றாக படிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது என்றும் நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா குறிப்பிட்டார். அதே சமயம் வகுப்பறைக்குள் முகத்தை மறைக்கும் புர்கா அணியவும், கல்லூரி வளாகத்திற்குள் மத ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், ஹிஜாப் உள்ளிட்ட உடைகளை தடை செய்த கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

வெள்ள பாதிப்பு: குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு ஒப்புதல்