போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகையை இன்றைக்குள் வழங்க வேண்டும்: ராமதாஸ்

ஊக்கத்தொகை வழங்காமல் தமிழக அரசு தாமதப்படுத்துவதன் நோக்கம் தெரியவில்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி 20 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 10-ம் தேதி அறிவித்திருந்தார். அதன்பிறகு இன்றுடன் 20 நாட்கள் ஆகும் நிலையில் இதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு தீப ஒளி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.

அதேபோல், மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. உழைக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் அரசு காட்டும் தேவையற்ற தாமதம் கண்டிக்கத்தக்கது. வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், அதே வேகத்தில் அது வழங்கப்பட்டுவிடும் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. நேற்று இரவு வரை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.

தீபாவளி திருநாளுக்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் ஊக்கத்தொகை வழங்காமல் தமிழக அரசு தாமதப்படுத்துவதன் நோக்கம் தெரியவில்லை. குறித்த காலத்தில் வழங்கப்படாத ஊக்கத்தொகை பயனற்றதாகிவிடும் என்பதை அரசு உணர வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் அனைத்து ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இன்று முதல் தீபாவளி வரை சிறப்புப்பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், தீபாவளி முடிவடையும் வரை அவர்களால் குடும்பத்தினருடன் சென்று தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவது சாத்தியப்படாது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தீபாவளிக்கான ஊக்கத்தொகையை போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர்களின் வலிகளை புரிந்து கொள்ள அரசு தவறிவிட்டது. ஒரு நாளுக்கு 12 மணி நேரம் பணி செய்ய சட்டம் கொண்டு வந்த முதலாளித்துவ அரசிடமிருந்து இத்தகைய குறைந்தபட்ச தொழிலாளர் ஆதரவு செயல்பாடுகளை எதிர்பார்ப்பது கூட பாட்டாளிகளின் தவறுதான்.

தீபாவளிக்கு முழுமையாக நாளைய ஒரு பொழுது மட்டுமே இருக்கும் நிலையில், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீபாவளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்று பொருட்களை வாங்குவதற்கு வசதியாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பணி இடைவெளி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

‘Wish Everyone A Healthy, Happy, Prosperous Life,’ PM Modi Extends Diwali Greetings

Barely 1% Job Relevance Of Engineering Education, Indore’s SGSITS Plans To Boost It To 20%

MP Updates: ‘MP’s Voters’ Count Stands At 5,61,38,277,’ Says CEO; Omkareshwar Floating Solar Plant Begins Generating Electricity In Full Capacity