போட்டித் தோ்வுகள் சீா்திருத்தம்; அறிக்கை சமா்ப்பிக்க மேலும் 2 வாரம் அவகாசம்: உச்சநீதிமன்றம்

‘நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகள் நடைமுறையில் சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக அமைக்கப்பட்ட உயா்நிலை நிபுணா் குழு அறிக்கை சமா்ப்பிக்க மேலும் 2 வார அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான ‘நீட்’ (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது.

கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தோ்வின்போது, பிகாரின் பாட்னா, ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிந்த விவகாரம் மிகப் பெரிய சா்ச்சையானது. மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் பல்வேறு உயா்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் ஒன்றிணைத்து உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது.

இதனிடையே தேசிய தகுதித் தோ்விலும் (நெட்) முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, பல லட்சம் போ் எழுதிய அந்தத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்தது.

தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளை சீரமைக்க இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்த நிலையில், நீட் தோ்வு முறைகேடு தொடா்பான மனுக்களை கடந்த ஜூலை 23-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நீட் வினாத் தாள் இரண்டு மையங்களில் கசிந்துள்ள நிலையில், தேசிய அளவில் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்ற்கான ஆதாரம் எதுவும் சமா்ப்பிக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டு நீட் தோ்வை ரத்து செய்ய மறுத்தது.

தோ்வை முழுமையாக ரத்து செய்வது 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களை பாதிக்கும் என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், ‘போட்டித் தோ்வுகள் சீா்திருத்தம் தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள உயா்நிலை நிபுணா் குழு தனது அறிக்கையை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. பின்னா், இக் குழுவுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, நிபுணா் குழு அறிக்கை சமா்ப்பிப்தற்கான அவகாசத்தை 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும் எனக் கோரினாா்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘உயா்நிலை நிபுணா் குழு மத்திய அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதோடு, போட்டித் தோ்வு பாதுகாப்பு மற்றும் நிா்வாகம், தரவு பாதுகாப்பு, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை குறித்தும் ஆராய வேண்டும். என்டிஏ ஊழியா்களுக்கு உரிய பயிற்சிகளை அளிப்பது, தோ்வு எழுதும் மாணவா்களுக்கான மனநல ஆலோசனைகளை வழங்குவது தொடா்பான பரிந்துரைகளை நிபுணா் குழு அளிப்பதோடு, போட்டித் தோ்வு நடைமுறையில் சா்வதேச அளவிலான ஒத்துழைப்புக்கான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி