போராட்டம் எதிரொலி; இந்தியா-வங்காளதேசம் எல்லையில் உஷார் நிலையில் பி.எஸ்.எப். படை

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான 4,096 கி.மீ. தொலைவு பகுதிகளில் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்க எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

டாக்கா,

வங்காளதேசத்தில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடைமுறையின்படி, வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் கடந்த மாதத்தில், வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து இருந்தது.

வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நேற்றும் புதிதாக மோதல் ஏற்பட்டது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல் துறை அதிகாரிகள் உள்பட 100 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தூதரகத்திற்கு உட்பட்ட எல்லை பகுதியில் வசித்து வரும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்திய நாட்டினரும் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும். தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறது.

அவசரநிலை ஏற்பட்டால், 88-01313076402 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என தெரிவித்து உள்ளது. போராட்டத்தின்போது, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்த சூழலில், நேற்று மாலை 6 மணியில் இருந்து நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்கை அமல்படுத்தவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதற்கு முன், பேச்சுவார்த்தைக்கு வரும்படி மாணவர்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. எனினும், அவர்கள் அதனை நிராகரித்து விட்டனர்.

இந்த சூழலில், வங்காளதேசத்தில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். டாக்கா மற்றும் பிற பகுதிகளில் வன்முறை பரவி பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், பாதுகாப்பு நடவடிக்கையாக, டாக்கா அரண்மனையை விட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறி விட்டார் என கூறப்படுகிறது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வங்காளதேசத்தில் போராட்டம் எதிரொலியாக, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவருடைய சகோதரி இருவரும் கோனோ பாபன் என்ற அரசு இல்லத்தில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறி விட்டனர்.

இந்நிலையில், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஜாத்ரபாரி மற்றும் டாக்கா மருத்துவ கல்லூரி பகுதிகளில் இன்று நடந்த மோதலில் பொதுமக்களில் 6 பேர் பலியாகி உள்ளனர்.

வங்காளதேசத்தில் போராட்டம் எதிரொலியாக, இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதனால், ஏறக்குறைய நாடு முழுவதும் இணையதள சேவை முடங்கி உள்ளது.

வங்காளதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ள சூழலில், இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான 4,096 கி.மீ. தொலைவு பகுதிகளில் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்க எல்லை பாதுகாப்பு படையினருக்கு (பி.எஸ்.எப்.) அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

நிலைமையை கண்காணிப்பதற்காக, பி.எஸ்.எப். இயக்குநர் ஜெனரல் (பொறுப்பு) தல்ஜித் சிங் சவுத்ரி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அனைவரும் கொல்கத்தா நகருக்கு சென்றடைந்து உள்ளனர்.

வங்காளதேசத்தில் சமீப வாரங்களாக காணப்படும் வன்முறையான சூழலை முன்னிட்டு, எல்லை பகுதிகளில் பணியாற்றி வரும் பி.எஸ்.எப். படையினர் அனைவரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தீவிர உஷார் நிலையில் இருக்கும்படி அனைத்து படை பிரிவுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Related posts

முக்கிய வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை: இலங்கை புதிய அரசு உத்தரவு

லெபனானை முழு பலத்துடன் ஆதரிப்போம் – ஈரான்

ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல்