புது டெல்லி,
பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக தற்போது போலந்து புறப்பட்டுள்ளார். இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் போலந்தில் பயணம் மேற்கொள்கிறார் . இதன் மூலம் கடந்த 45 ஆண்டுகளில் போலந்து செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். அங்கு, போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், அதிபர் ஆண்ட்ரெஜ் டூடா ஆகியோரை சந்தித்து மோடி பேச உள்ளார். அதனைத்தொடர்ந்து, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடுகிறார்.
இரண்டு நாட்கள் போலந்தில் பயணத்தை முடிக்கும் மோடி, அங்கிருந்து ரெயில் மூலம் வரும் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார். ரஷிய போர் தொடங்கியதற்கு பின்னர் முதல்முறையாக அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனுக்கு செல்கிறார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு செயலாளர் தன்மயா லால், "உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இந்த வார இறுதியில் (வெள்ளிக்கிழமை, 23ம் தேதி) உக்ரைனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இது ஒரு முக்கிய மற்றும் வரலாற்றுப் பயணமாகும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த பயணம், இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயான சமீபத்திய உயர்மட்ட தொடர்புகளின் அடிப்படையில் அமையும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, போருக்கான தீர்வு பேச்சுவார்த்தைதான் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.