போலி வெடிகுண்டு மிரட்டல்கள்… குற்றவாளிகள் விமானங்களில் பறக்கத் தடையா?

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றவாளிகளை விமானங்களில் பறப்பதற்கானத் தடை பட்டியலில் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதாக சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 100 விமானங்களுக்கு போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதனால், விமான நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தில்லியில் பேசிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புக்கு எதிரான சட்டவிரோத செயல்களை ஒடுக்குதல் சட்டம், 1982 -ன் கீழ் விமான பாதுகாப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தார்.

அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றவாளிகளை விமானங்களில் பறப்பதற்கானத் தடை பட்டியலில் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.

இதையும் படிக்க: ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!

மேலும், “விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் உள்துறை அமைச்சகத்துடன் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

இதுபோன்ற அச்சுறுத்தல் சம்பவங்கள் நடக்கும்போது அதனை சரியான முறையில் கையாள வேண்டும். இதற்கென சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளன” என்றார்.

தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், “கடந்த வாரம் மட்டும் 8 விமானங்கள் வரை திருப்பி விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு அச்சுறுத்தலும் தனித்தனியே கண்காணிக்கப்பட்டது. இந்தப் பிரச்னைகளை சிறப்பாக கையாண்டுள்ளோம். அவை போலி வெடிகுண்டு மிரட்டல்களாக இருந்த போதிலும் பாதுகாப்பில் நாங்கள் எந்த சமரசமும் செய்யவில்லை.

பயணிகளின் உயிர், பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். மேலும், சரியான நடைமுறைகளைப் பின்பற்றுதலும் மிக முக்கியமானது. தற்போது விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஒரு வாரத்தில் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Related posts

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி இன்று ரஷியா பயணம்

உமா பதிப்பக நிறுவனா் இராம. லட்சுமணன் காலமானாா்