மகளிர் சுய உதவிக் குழுக்களின் தீபாவளி பரிசு பெட்டகம் விற்பனை தொடக்கம்: ஆன்லைனில் முன்பதிவு 

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தீபாவளி பரிசு பெட்டகம் விற்பனை தொடக்கம்: ஆன்லைனில் முன்பதிவு

சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் இனிப்பு, கார வகைகள் மற்றும் தயாரிப்பு பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசு பெட்டகத்தின் விற்பனை தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விழாக் காலங்களுக்கு ஏற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அடங்கிய ‘மதி தீபாவளி பரிசு பெட்டகம்’ தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பரிசு பெட்டகத்தில் சிவப்பு அரிசி லட்டு, உலர் பழங்களின் லட்டு, கம்பு லட்டு, சோள லட்டு, ராகி லட்டு, கருப்புக் கவுனி லட்டு, கருப்பு உளுந்து லட்டு, நரிப்பயிர் லட்டு, தினை லட்டு, சாமை மற்றும் ஆவாரம் பூ லட்டு ஆகிய லட்டு வகைகள், சாமை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, அரிசி முறுக்கு, கை முறுக்கு ஆகிய கார வகைகளும் இடம்பெற்றுள்ளன. இத்துடன் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள், கோரைப்புல்லில் செய்யப்பட்ட அலங்காரப் பரிசு பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுமக்கள் இவற்றை மொத்தமாகவோ அல்லது சிறிய அளவிலோ விரும்பும் வகையில் www.tncdw.org என்ற இணையதளம் மற்றும் 76038 99270 என்ற செல்போன் எண் வாயிலாக முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மொத்த விற்பனைக்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்த விற்பனை வரும் அக்.23-ம் தேதி நடைபெறுகிறது. கூடுதல் விவரங்களுக்கு சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் உள்ள மதி அனுபவ அங்காடியை அணுகலாம் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

சமையல் எண்ணெய், முந்திரி, நெய், விலை அதிகரிப்பு எதிரொலி: தீபாவளி இனிப்பு பலகார வகைகள் கிலோவுக்கு ரூ.50 உயர்வு

“திமுக மாநாட்டுக்கு இல்லாத கட்டுப்பாடு விஜய் மாநாட்டுக்கு ஏன்?” – சீமான் கேள்வி

‘புழல் சிறையில் உணவு சரியில்லை’ – தனிமை சிறையில் உள்ள விசாரணை கைதியை மீட்கக் கோரி வழக்கு