மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை திணறல் – இந்தியா அபார வெற்றி!

20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் 12-ஆவது போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்று(அக். 9) பலப்பரீட்சை நடத்தின. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்கள் திரட்டியது.

இந்திய அணியில் ஷஃபாலி வர்மாவும் ஸ்மிரிதி மந்தனாவும் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். ஷஃபாலி வர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய ஸ்மிரிதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 38 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் திரட்டி ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தன் பங்குக்கு மட்டையை சுழற்ற, இந்திய அணியின் ஸ்கோர் அசுர வேகத்தில் எகிறியது. இலங்கை அணியின் பந்துவீச்சை எல்லைக் கோட்டிற்கு அப்பால் பறக்கவிட்ட ஹர்மன்ப்ரீத் கௌர் 27 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 173 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறியது. இதையடுத்து, 19.5 ஓவர்களில் 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை. இதன்மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இந்திய அணியில் அருந்ததி ரெட்டி, ஆஷா ஷோபனா தலா 3 விக்கெட்டுகளையும், ரேணுகா தாக்குர் சிங் 2 விக்கெட்டுகளையும், ஷ்ரேயங்கா பாட்டில் மற்றும் தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

அதிரடியாக ரன்களைத் திரட்டி அரைசதம் கடந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்ப்ரீத் கௌருக்கு இன்றைய ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான பரிசு அளிக்கப்பட்டது.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக