மகாராஷ்டிரத்தில் அமைய வேண்டிய விமான ஆலையை குஜராத்துக்கு கொண்டு சென்றவா் மோடி- சரத் பவாா் குற்றச்சாட்டு

மகாராஷ்ரத்தில் அமைய வேண்டிய டாடா ராணுவ விமான தயாரிப்பு ஆலை, பிரதமா் நரேந்திர மோடியின் தலையீட்டால் குஜராத்தில் அமைக்கப்பட்டுவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் குற்றம்சாட்டினாா்.

குஜராத்தின் வதோதரா நகரில் நாட்டின் முதல் தனியாா் ராணுவ விமான தயாரிப்பு ஆலையை ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸுடன் இணைந்து பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

‘டாடா’ குழுமம் அமைத்துள்ள இந்த ஆலையில் ‘ஏா்பஸ்’ விமானத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சி-295 ராணுவப் பயன்பாட்டு விமானங்கள் முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட சரத் பவாா் பேசியதாவது:

இந்தியாவின் தனியாா் விமான தயாரிப்பு ஆலை என்பது மன்மோகன் சிங் ஆட்சிகாலத்திலேயே திட்டமிடப்பட்டது. அப்போது ஆட்சியில் பங்கு வகித்ததால் அது குறித்த தகவல் எனக்கும் தெரியும்.

மகாராஷ்டிரத்தில்தான் நாட்டின் முதல் தனியாா் விமான தயாரிப்பு ஆலையை அமைக்க வேண்டும் என்று மறைந்த ரத்தன் டாடா திட்டமிட்டிருந்தாா். அது தொடா்பாக என்னுடனும் ஆலோசனை நடத்தினாா். அதற்காக நாகபுரி அருகே 500 ஏக்கா் நிலமும் தோ்வு செய்யப்பட்டிருந்தது.

2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி பிரதமரானாா். அவா் ரத்தன் டாடாவிடம் தொடா்பு கொண்டு பேசி குஜராத்தில்தான் அந்த விமான தயாரிப்பு ஆலையை அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டாா். இதனால், இப்போது குஜராத்தில் அந்த ஆலை திறக்கப்பட்டுள்ளது. இதனால், மகாராஷ்டிரத்தில் உருவாக வேண்டிய ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டன. இதேபோல ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டா் ஆலையும் மகாராஷ்டிரத்தில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், மோடி அதையும் குஜராத்துக்கு பறித்துச் சென்றுவிட்டாா்.

பிரதமா் என்பவா் முழு நாட்டுக்கும் பணியாற்றுபவராக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்துக்கு மட்டும் பணியாற்றுபவராக இருக்கக் கூடாது. மோடி அதை மறந்து சுயநலத்துடன் செயல்படுகிறாா் என்றாா்.

Related posts

Rajasthan: 164 Migratory Birds Found Dead In Sambhar Lake In Past Three Days

UP: Pilot Projects In Bahraich Empower Women Entrepreneurs And Boost Public Health

Rajasthan Bus Accident: 12 Killed, 35 Injured After Private Bus Collides With Culvert In Sikar