மகாராஷ்டிரத்துக்கு இன்னும் தேர்தல் அறிவிக்காதது ஏன்?- காங்கிரஸ் கேள்வி!

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என வலியுறுத்தும் மத்திய அரசு, மகாராஷ்டிர மாநிலத்துக்கு இன்னும் தேர்தல் அறிவிக்காதது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் – சிவசேனை(யுபிடி) ஆகிய கட்சிகள் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியில் உள்ள நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.

இதையடுத்து மகாராஷ்டிர தேர்தல் குறித்து நாக்பூரில் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா,

'மகாராஷ்டிரத்தில் எங்கள் கூட்டணி முதல்வர் வேட்பாளர் குறித்து விவாதிப்பதை நிறுத்திவைத்துள்ளோம். தேர்தல் முடிந்தபிறகு அதுகுறித்து பேசவிருக்கிறோம்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே குறிக்கோள். ஊழல் மிக்க பாஜக அரசை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும்' என்றார்.

இதையும் படிக்க | இலங்கை அதிபராக அநுரகுமார திஸ்ஸநாயக பதவியேற்பு!

மேலும் பேசிய அவர், 'ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார்கள். ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா தேர்தல்களுடன் ஏன் மகாராஷ்டிரத்துக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இங்கு தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக வேண்டும். ஏனெனில் மக்கள் பாஜக ஆட்சியை நீக்க காத்திருக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் வருத்தமளிப்பதாகவும் உண்மை என்னவென்பதை நாட்டு மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Related posts

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் மகாராஜா பட நடிகை!

ஆஸ்கருக்கு லாபதா லேடீஸ் பரிந்துரை!

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்: பலி 182 ஆக உயர்வு!