மகாராஷ்டிரம்: அனுதாபமா, ஆதாய அலையா?

நமது சிறப்பு நிருபர்

வரும் நவம்பர் 20-ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தேர்தல்! 1985-ஆம் ஆண்டுக்கு பின்னர் மகாராஷ்டிரத்தில் எந்தவொரு கட்சிக்கும் பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இங்கு மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நீண்ட காலமாக மகாராஷ்டிரத்தை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ், கடைசியாக 1990-ஆம் ஆண்டு 141 இடங்களை வென்றது. அதன் பின்னர் அக்கட்சி 100 இடங்களை தாண்டிய வெற்றியைக் கண்டதில்லை.

மகாராஷ்டிரத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து வந்த பாஜக, 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக அதிகபட்சமாக 122 தொகுதிகளில் வென்றது. இதன் மூலம் பாஜக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் 5 வருடங்கள் 12 நாள்கள் முதல்வராக இருந்து முழுமையான ஆட்சியைத் தந்தார். இப்போது 15-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலை மகாராஷ்டிரம் சந்திக்கவுள்ளது.

இரு மகா கூட்டணிகள்: பாஜக, சிவசேனை (ஏக்நாத்), தேசியவாத காங்கிரஸ் (ஏபி-அஜீத் பவார்) கட்சிகள் அடங்கிய மஹாயுதி (மகா கூட்டணி) ஒரு அணியாகவும் காங்கிரஸ், சிவசேனை (யுபிடி-உத்தவ் பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி- சரத்பவார்) உள்ளிட்ட “இண்டி’ கூட்டணி கட்சிகள் இடம்பெற்ற மஹா விகாஸ் அகாடி (எம்விஏ – மகாராஷ்டிர முன்னேற்ற அணி ) மற்றொரு கூட்டணியாகவும் களத்தில் உள்ளன. இந்த இரு மகா அணிகளுக்குள்ளேயும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசியலில் தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் மற்றொரு கூட்டணியில் அங்கம் வகிப்பதும்தான் இங்குள்ள பெரிய கட்சிகளின் வரலாறு.

யார் முதல்வர் வேட்பாளர்?: மகாராஷ்டிரத்தில் மஹா விகாஸ் அகாடி (எம்விஏ) அணியில் காங்கிரஸூம், சிவசேனையும் தலா 100 தொகுதிகளுக்கு மேலாக போட்டியிட விரும்புகின்றன. மீதமுள்ளவற்றை சரத்பவார் தலைமையிலான என்சிபிக்கு பகிர எம்விஏ அணி விரும்புகிறது. தொகுதிப் பங்கீடு இழுபறி ஒருபக்கமிருக்க, சிவசேனை (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அழுத்தம் கொடுத்து வருகிறார். இன்னும் கருத்தொற்றுமை உருவாகவில்லை. “மராத்தா’ சமூகத்தைச் சேர்ந்த கட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில், இந்த கட்சிகள் “இண்டி’ கூட்டணி என்ற அடையாளத்தோடு மட்டுமே தேர்தல் களத்தை எதிர்கொள்கின்றன.

மக்களவைத் தேர்தலில் மஹாயுதி அணி 31இடங்களில் தோல்வியடைந்தது. மகாராஷ்டிர அரசுக்கு எதிரான அதிருப்தி அலையோடு, அஜீத் பவாரைத் தன்பக்கம் இழுத்து தேசியவாத காங்கிரûஸ உடைத்ததால் எழுந்த "அனுதாப அலை', மக்களவை தேர்தலில் "எம்விஏ' வெற்றி பெற உதவியதாக கூறப்பட்டது.

"மஹாயுதி' உத்தி: “மஹாயுதி’ கூட்டணி, தனக்கு எதிராக அதிருப்தி அணியின் பலவீனங்களையே தனது பலமாக்கிக்கொண்டு தேர்தல் களம் காண்கிறது. மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை, மதச்சார்பின்மை அரசியல் ஆகியவற்றை முறியடிக்க தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதை முதல் கட்ட தேர்தல் முழக்கமாக வெளிப்படுத்தியுள்ளது மஹாயுதி கூட்டணி.

தேவேந்திர ஃபட்னவீஸ்- ஏக்நாத்

முதல்வர் வேட்பாளரை அலுவல்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் தொகுதிப் பங்கீட்டில் எழும் சில சங்கடங்களை பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என மஹாயுதி கூட்டணி தலைவர்கள் நம்புகிறார்கள்.

பாஜக 155-160; சிவசேனை (ஏ.எஸ்) 80 – 85; தேசியவாத காங்கிரஸ் (ஏபி) 50-55 என்றவாறு தொகுதிப்பங்கீட்டை சுமுகமாக முடிக்க இக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அத்துடன் மராத்தா சமூக இடஒதுக்கீடு கோரிக்கையை மட்டும் நம்பாமல் 50 சதவீதத்திற்கு மேலே இருக்கும் இதர பிற்படுத்தவர்களின் வாக்காளர்களை திருப்திப்படுத்தும் வாக்குறுதிகளை அறிவிக்க மஹாயுதி கூட்டணி திட்டமிட்டுள்ளது.

விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, சுங்கச் சாவடி வரி விலக்கு மற்றும் பல மத்திய, மாநில சமூக திட்டங்கள் போன்றவற்றோடு சட்டப்பேரவைத் தேர்தலை முழு மனதில் வைத்து பெண் வாக்காளர்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களும் இதில் அடங்கும். ஏற்கெனவே "மை டியர் சிஸ்டர் யோஜனா' என்கிற "அன்பு சகோதரி திட்டம்' மூலம் மாதம் ரூ.1,500-ஐ 18 வயதிலிருந்து 65 வயதுடைய மகளிர்களுக்கு உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

ஹரியாணா தேர்தல் முடிவு கொடுத்த உற்சாகத்துடன், ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை, ஆட்சிக்கலைப்பு அனுதாப அலை போன்றவற்றை முறியடித்து மக்களுக்கான "ஆதாய அலை' துணையுடன் தேர்தல் முன்னரங்கில் பாஜக கூட்டணி முன்னணியில் நிற்கிறது…!

மக்களவைத் தேர்தல் வெற்றிக்களிப்பில் இருக்கும் மஹா விகாஸ் அகாடி, ஆளும் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையை பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கும் உத்தியை எப்போது துவங்கும் எனத் தெரியவில்லை.

மொத்தத்தில் மகாராஷ்டிரத்தில் இரு அணிகளும் கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தை அனுபவித்துள்ளன. இதில் எந்த ஆட்சி சிறந்தது என்பதற்கான தீர்ப்பை மக்கள் அளிக்கவுள்ளனர். எனவே மகாராஷ்டிரத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமையுமா அல்லது மீண்டும் அரசியல் சிக்கல்களை இந்த மாநிலம் எதிர்கொள்ளுமா என்பதற்கு தேர்தல் முடிவுகள் வெளிவரும் நவம்பர் 23ஆம் தேதி வரை நாமும் காத்திருக்கத்தான் வேண்டும்!

மகாராஷ்டிரம் சட்டப்பேரவை தேர்தல் 2024

தேர்தல் நாள் 20.11.2024

வாக்கு எண்ணிக்கை 23.11.2024

மொத்த தொகுதிகள் 288 (எஸ்சி – 29, எஸ்டி – 25)

மொத்த வாக்காளர்கள் 9.6 கோடி

மொத்த வாக்குச்சாவடிகள் 1,00,186

2019 மக்களவை தேர்தல்

என்டிஏ 41 (பாஜக 23, சிவசேனை 18)

யுபிஏ 6 (என்சிபி 4, காங்கிரஸ் 2)

எம்ஜிபி 0

பிறர் 1

மொத்தம் 48

2024 மக்களவை தேர்தல்

காங்கிரஸ் 13

பாஜக 9

யுபிடி உத்தவ் தாக்கரே 9

என்சிபி சரத் பவார் 8

சிவசேனை 7

என்சிபி 1

சுயேச்சை 1

மொத்தம் 48

2019 சட்டப்பேரவை தேர்தல்

பாஜக 105

எஸ்எஸ் 56

என்சிபி 54

காங்கிரஸ் 44

பிறர் 29

மொத்தம் 288

Related posts

Mumbai: CBI Initiates Probe Against MTPL Officials In Cheating Case For Over $11 Million Repayment Dues To UCO Bank Singapore

What Are Macadamia Nuts? Learn Its Amazing Health Benefits For Your Body

Guiding Light: Krishna Tattvam