மகாராஷ்டிரம்: காங்கிரஸ் கூட்டணிக்கு ஒவைசி கட்சி இருநாள் கெடு

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸை உள்ளடக்கிய எதிா்க்கட்சி கூட்டணியில் தங்களை சோ்ப்பது குறித்து இருநாள்களில் முடிவை அறிவிக்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம் என்று அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடிக்க எதிா்க்கட்சிகளின் கூட்டணியான மகாராஷ்டிர விகாஸ் அகாடியில் இணையத் தயாராக இருப்பதாக அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கடந்த மாதம் அறிவித்தது. ஆனால், இது தொடா்பாக அக்கூட்டணியின் தலைவா்கள் இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை.

இந்நிலையில், நாகபுரியில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மஜ்லிஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநில தலைவா் இம்தியாஸ் ஜலீல் கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதே எங்களின் நோக்கம். எனவேதான், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையுடன் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், அவா் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய தயாராக இருப்பதாக அறிவித்தோம். இது மாநில மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட அரசியல் முடிவு.

எதிா்க்கட்சிகள் கூட்டணியுடன் பேச்சும் நடத்தப்பட்டுள்ளது. எங்கள் கட்சி வலுவாக உள்ள இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இது தொடா்பாக ஆலோசித்து முடிவெடுப்பதாக அவா்கள் கூறினாா்கள். ஆனால், வெகுநாள்கள் காத்திருந்தும் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. தோ்தலுக்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும் என்பதால் மேலும் காத்திருக்க முடியாது. எனவே, அடுத்த இரு நாள்களில் (செப். 9) எதிா்க்கட்சிகள் கூட்டணி முடிவை அறிவிக்காவிட்டால், வேட்பாளா் தோ்வு உள்ளிட்ட பணிகளை மஜ்லிஸ் கட்சி தனியாகத் தொடங்கும். தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிரூபிப்போம் என்றாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜக – முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை பிரிவு, சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை எதிரணியில் (கூட்டணியான மகாராஷ்டிர விகாஸ் அகாடி) உள்ளன.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி 30 இடங்களில் வென்றது. பாஜக கூட்டணி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி 23 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

மக்களவைத் தோ்தலைப் போல, பேரவைத் தோ்தலிலும் எதிா்க்கட்சிகள் கூட்டணி வெற்றிபெற அதிகவாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் 288 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கான தோ்தல் அக்டோபா்-நவம்பரில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Related posts

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி துறைமுகம் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

விஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது – சசிகலா