மகாராஷ்டிர பாஜக கூட்டணிக்குள் மோதல்! மொத்த தொகுதிகள் 288! கேட்பதோ 360!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீட்டில் பாஜக, சிவசேனை மற்றும் தேசியவாத கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில், பாஜக 160, சிவசேனை 100+, தேசியவாத காங்கிரஸ் 60+ இடங்களில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இழுபறி நீடிக்கிறது.

ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியாணா பேரவைத் தேர்தலுடன் மகாராஷ்டிர தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

இருப்பினும், நவம்பர் 26ஆம் தேதியுடன் தற்போதைய சட்டப்பேரவையில் பதவிக் காலம் நிறைவடைவதால், அதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் ஆட்சியில் உள்ள பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பாஜக கூட்டணியில் மோதல்

பாஜக கூட்டணியை பொறுத்தவரை முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி, குறைந்தது 100 தொகுதிகளை ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடன் கோரிக்கை வைத்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 9 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், 15 தொகுதிகளில் போட்டியிட்ட ஷிண்டேவின் சிவசேனையும் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதனடிப்படையில், பாஜகவுக்கு நிகரான தொகுதிகளை சிவசேனை தரப்பினரும் கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஷிண்டேவின் ஆதரவாளர் கூறுகையில், “மராத்தி மற்றும் ஹிந்துத்துவா வாக்குகளை நாங்கள் தக்கவைத்துள்ளோம். குறைந்தது 100 தொகுதிகள் கிடைத்தால் மட்டுமே இந்தியா கூட்டணியை வீழ்த்த முடியும், மேலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனையையும் கைப்பற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்டு 105 இடங்களில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், தற்போது அதே அளவிலான தொகுதியில் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றது.

இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து அடுத்தகட்ட பணிகளை தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், மக்களவைத் தேர்தல் செயல்பாட்டின் அடிப்படையில் தொகுதி பங்கீட்டை பாஜக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலையில் போராடும் மருத்துவர்களுக்கு குவியும் உதவிகள்.. உணவு, குடிநீர், மின்விசிறி!

ஆளும் கூட்டணிக்கு பின்னடைவு?

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களில் மட்டுமே ஆளும் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், இந்தியா கூட்டணி 30 இடங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேவரா வெளியீட்டு டிரைலர்!

வார இறுதியில் சந்தித்த 3 நண்பர்கள் பலி! அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து!

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றமில்லை: பிசிசிஐ