மகா விஷ்ணுவைக் கண்டித்த ஆசிரியர் சங்கர் கிறிஸ்தவர் என வதந்தி – தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு

சென்னை,

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ – புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும் முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என பேசிய மகா விஷ்ணுவின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியுள்ளார்.

மகா விஷ்ணு பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை கூறிய மகாவிஷ்ணுவை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மூடநம்பிக்கைகள் குறித்து பேசியவரை, அதே மேடையில் வைத்து கேள்வி கேட்ட ஆசிரியருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு தெரிவித்தார். மேலும், "என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து, என் ஆசிரியரை அவமானப்படுத்தி பேசிய மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்" என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே பள்ளி நிகழ்ச்சியில் பேசிய சொற்பொழிவு சர்ச்சையான நிலையில், பேச்சாளர் மகாவிஷ்ணு நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "கடமைகள் இருந்ததால், அசோக் நகர் பள்ளி, சைதாப்பேட்டை பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அடுத்த நாளே ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். இதில் ஓடி ஒளிவதற்கான விஷயமே கிடையாது. எதற்காக நான் ஓடி ஒளிய வேண்டும். ஓடி ஒளியும் வகையில் நான் என்ன தவறான கருத்தை சொல்லிவிட்டேன்.

இன்று மதியம் 1.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறேன். இந்திய சட்டத்தின் மீதும், தமிழக போலீசார் மீதும் எனக்கு மதிப்பு உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஸ் என்னை பற்றி அதிகம் பேசி இருந்தார். என் மீது ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது. அதற்கு விளக்கம் கொடுக்க தமிழகத்தில் இருக்க வேண்டும். இறைவனிடம் சரணாகதி செய்து நேரடியாக உங்களை சந்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மகா விஷ்ணுவைக் கண்டித்த ஆசிரியர் சங்கர் கிறிஸ்தவர் என பேஸ்புக்கில் தகவல் பரவி வருகிறது, இது முற்றிலும் பொய்யான தகவல் என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், "சென்னை அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகா விஷ்ணுவைக் கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரின் பேஸ்புக் பக்கம் கிறிஸ்துவர் பெயரில் இருப்பதாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல்.

சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் 'அந்தோணி பர்ணாந்து' என்ற பேஸ்புக் பக்கம் ஆசிரியர் சங்கருடையது அல்ல. சென்னை அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு பேசியதை பேஸ்புக்கில் தொடர்ந்து விமர்சித்து வந்த 'அந்தோணி பர்ணாந்து' என்ற நபர், மகா விஷ்ணுவைக் கண்டித்ததற்காக ஆசிரியர் சங்கரை பாராட்டி அவரது புகைப்படத்தை நேற்று (06.09.2024) தனது புரொபைல் படமாக மாற்றி இருக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெள்ளி விழா, பொன் விழா, பவள விழாக்களைபோல நூற்றாண்டு விழாவிலும் திமுக ஆட்சியில் இருக்கும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

நாம் தமிழர் கட்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டார் சீமான்: திருச்சியில் நிர்வாகிகள் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் மிலாடி நபி பண்டிகை கோலாகலம்