மக்களவைத் தேர்தலைப் போன்று இடைத்தேர்தலிலும் வெல்வோம்: டிம்பிள் யாதவ்

உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சி மாபெரும் வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய டிம்பிள் யாதவ், உத்தரப் பிரதேசத்தின் கர்ஹல் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சி மிகப்பெரிய வெற்றி பெறும். கட்சியும் கட்சித் தொண்டர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் வெற்றியைப் போன்ற வெற்றிக்காக உழைத்துள்ளோம். இடைத்தேர்தல் முடிவுகளும் எங்களுக்கு நேர்மறையாக இருக்கும் என்றே நம்புகிறோம். கடந்தமுறை கையாண்ட யுக்தியே இம்முறையும் கடைபிடித்துள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

போக்குவரத்துத் துறையில் விதிமுறைகளை சரிவர விதிப்பதில் ஆளும் பாஜக அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

உத்தரப் பிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் நடப்பதாகவும், இதற்கு உரிய தீர்வு காணாமல், வாகனங்களை பறிமுதல் செய்வதும், பணம் பறிப்பது மட்டுமே பாஜக ஆட்சியின் நோக்கமாக உள்ளதாகவும் விமர்சித்தார்.

உ.பி. இடைத்தேர்தல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மீராபூர், குந்தர்கி, காஸியாபாத், கஹேர், கர்ஹால், புல்பூர் மற்றும் கதஹரி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவும், 23ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், அயோத்தியா மாவட்டத்தில் உள்ள மில்கிபூர் தொகுதி தவிர்த்து மற்ற 9 தொகுதிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைப் போன்று அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகம், கேரளம், ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி