மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று.. அமெரிக்காவை நெருங்கும் அதி தீவிர புயல்!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை கடந்த செப். 26-ஆம் தேதி தாக்கியது. புயலால் ஃபுளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜியாா்ஜியா உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

புயல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்து கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள வீடுகள், சாலைகள், மின்சார கட்டமைப்புகள், கைப்பேசி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடந்த 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவை தாக்கிய கட்ரினா புயலுக்குப் பிறகு அந்நாட்டை தாக்கிய புயல்களில் மிக மோசமானது ஹெலீன் புயல் என்று கூறப்படுகிறது. புயல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225-ஐ கடந்துள்ளது.

இந்த நிலையில், ஹெலீன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஃபுளோரிடாவை அடுத்ததாக மில்டன் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க உள்ளது.

மெக்ஸிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறிய நிலையில், அதனைத்தொடர்ந்து மிகக் குறுகிய காலத்தில், 24 மணி நேரத்துக்குள் சக்தி வாய்ந்த புயலாக உருவாகி ஃபுளோரிடாவை நோக்கி நகர்ந்து வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சக்தி வாய்ந்த புயல்களில் ஒன்றாக மில்டன் புயல் வரையறுக்கப்பட்டுள்ளது. மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதும் வழக்கத்திற்கு மாறானதொரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த புயல் ஆபத்து பிரிவில் 5-ஆம் நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிவேக சூறாவளிக்காற்று வீசுவதுடன், கடும் மழைப்பொழிவும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும், எனினும், புயல் கரையைக் கடக்கும்போது சற்று வலுவிழந்து ஆபத்து பிரிவில் 4-ஆம் நிலை புயலாக கரையைக் கடந்தாலும் காற்றின் வேகம் மணிக்கு 233 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், டாம்பா வளைகுடா பகுதியில் கரையைக் கடக்கக் கூடும் என்று அமெரிக்க தேசிய புயல் மையம் எச்சரித்துள்ளது. 15 அடி உயரம் வரை கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் நகர்ந்து வரும் வேகத்தை கணக்கிட்டு நாளை(அக். 9) மில்டன் புயல் கரையைக் கடக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 லட்சம் மகக்ள் பாதிப்படைவர்.

இதையும் படிக்க:அமெரிக்காவை தாக்கிய ஹெலீன் புயல்: உயிரிழப்பு 227-ஆக அதிகரிப்பு

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புளோரிடாவில் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இரண்டே வார கால இடைவெளியில் 2 புயல்களின் தாக்கத்தை எதிர்கொள்ள இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தயாராகி வருகின்றனர். முன்னதாக கடந்த செப். 26-ஆம் தேதி இப்பகுதிகளில் ஹெலீன் புயல் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஃபுளோரிடாவின் பினெல்லாஸ் கவுண்ட்டியில் மட்டும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லீ கவுண்ட்டியில் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களும், புளோரிடாவில் புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ள 6 கவுண்ட்டிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்