மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்த வங்கி ஊழியர்… கத்தியால் குத்திக் கொன்ற தந்தை – தேனியில் பரபரப்பு

தேனி,

தேனி மாவட்டம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60 வயது). இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது தாய் ராஜம்மாள் மற்றும் இளைய மகன் சுகுமாருடன் (31 வயது) வசித்து வந்தார். ஜவுளி வியாபாரம் செய்து வந்த சுப்பிரமணி முதுமை காரணமாக கடந்த சில வருடங்களாக வியாபாரம் செய்யாமல் வீட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த சுகுமார் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து, தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரியும், சொத்தை பிரித்துத் தரகேட்டும் தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்த சுகுமார், தந்தையிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவரை கத்தியால் குத்த முயற்சித்து இருக்கிறார்.

அப்போது சுப்பிரமணி, மகன் கையில் இருந்த கத்தியை பிடுங்கி சுகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு சுப்பிரமணி போலீசாருக்கு தகவல் அளித்து இருக்கிறார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, சுகுமார் இறந்தது தெரிய வந்தது.

சுகுமாரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியை கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் தகராறு செய்த மகனை, தந்தையே குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்