மதுரையில் கடந்த 3 நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவில் அரசின் சார்பில் கலந்து கொண்டு அவரது நினைவாலயத்தில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், மதுரையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கனமழை பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.
மதுரையில் கடந்த 3 நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் தெருக்கள், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். போர்க்கால நடவடிக்கை எடுத்து இயல்பு நிலைக்கு கொண்டுவர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.