மதுரை | தீபாவளியை ஒட்டிய தொடர் விடுமுறை காரணமாக மீன் சந்தையில் குவிந்த மக்கள்

மதுரை | தீபாவளியை ஒட்டிய தொடர் விடுமுறை காரணமாக மீன் சந்தையில் குவிந்த மக்கள்

மதுரை: தீபாவளியை ஒட்டிய 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று மதுரையில் மீன் சந்தை, கடைகளில் மக்கள் அதிகளவில் குவிந்தனர். இதன் காரணமாக விற்பனை களை கட்டியது.

கடந்த 31ம் தேதி தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு, பலகாரங்களுக்கு எவ்வளவு முக்கியதுவமோ, அது போன்று ஆடு, கோழி இறைச்சிகளுக்கும் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பர். தீபாவளியன்று மதுரையில் அதிகளவில் இறைச்சிகள் விற்பனையாகின.

இந்நிலையில், தீபாவளியை ஒட்டிய 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏராளமான பொதுமக்கள் மதுரை மாநகரிலுள்ள மீன் இறைச்சி சந்தைகளில் அதிகாலை முதலே குவிந்தனர். மாட்டுத்தாவணி, நெல்பேட்டை, தெற்குவாசல், கரிமேடு போன்ற பகுதிகளிலுள்ள மீன்சந்தைகளில் திரண்ட ஏராளமான மக்கள் நெய்மீன், பாறை மீன், வாலை மீன் மற்றும் நண்டு, இறால் உள்ளிட்டவற்றை மிக ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

நண்டு 1 கிலோ ரூ.600 முதல் இறால் கிலோ ரூ.350 முதலும் விற்பனையானது. மீன் வகைகள் கிலோ ரூ.350 முதல் ரூ. 800 வரை விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகமில்லாததால் விலை சற்று கூடுதலாக இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஒத்தக்கடை பகுதி கடல் மீன்கள் வியாபாரி திருமுருகன் என்பவர் கூறுகையில், ''தொடர்மழை மற்றும் தீபாவளி காரணமாக மீனவர்கள் அதிகளவில் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் வரத்து குறைவாக இருந்தது. கரை வலை மீன்களே அதிகளவில் வந்தன. மஞ்சள் மாவுலா கிலோ ரூ.600, கருங்கனி பாறை ரூ.580, நெத்திலி ரூ.350, நெய் மீன் ரூ.800, 850 வரையிலும், வெள்ளக் கிளங்கான் ரூ. 480, கிளி மீன் ரூ.500, பச்சை முரள் ரூ.500, குள்ள முரள் ரூ.450, சிலுவன் முரள் 500, பண்ணை இரால் ரூ.350 முதல் ரூ. 400 என்ற அடிப்படையில் விற்கப்பட்டது. தூண்டில் மீன்களுக்கு கிராக்கி இருந்தது. தீபாவளிக்கு இறைச்சி சாப்பிட்ட மக்கள், ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன்களை வாங்க விரும்பியதால் மதுரையில் மீன் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது'' என்றார்.

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்