மத்திய அரசிடம் இருந்து எம்.சி.டி.க்கு ரூ.5,200 கோடி வழங்கக் கோரி நிதி அமைச்சருக்கு விரைவில் கடிதம் -செளரவ் பரத்வாஜ் தகவல்

மத்திய அரசிடம் இருந்து எம்.சி.டி.க்கு ரூ.5,200 கோடி
வழங்கக் கோரி நிதி அமைச்சருக்கு விரைவில் கடிதம் -செளரவ் பரத்வாஜ் தகவல்

நமது நிருபா்

புது தில்லி, ஆக.1: மற்ற நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் போலவே தில்லி மாநகராட்சியும் (எம்சிடி) மத்திய அரசிடமிருந்து மானியங்களைப் பெற வேண்டும் என்றும், எம்சிடிக்கு ரூ.5,200 கோடி வழங்கக் கோரி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் தில்லி அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராயுடன் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: வடிகால் மற்றும் சாலைகள் போன்ற உள்கட்டமைப்பை மேம்படுத்த தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனுக்கு (எம்சிடி) மத்திய அரசின் மானியம் தேவை. ஹரியாணா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள நகரங்களின் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மத்திய அரசின் மானியங்களைப் பெறுகின்றன.

தில்லி தேசியத் தலைநகரத்தில் தில்லி மாநகராட்சியும் மற்ற நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் போலவே, மத்திய அரசிடமிருந்து மானியங்களைப் பெற வேண்டும். எம்.சி.டி.க்கு மத்திய அரசிடமிருந்து 5,200 கோடி ரூபாய்க்கு மேல் மானியம் கிடைக்க வேண்டும். இது குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதுவேன்.

நாடு முழுவதும் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ரூ.1.21 லட்சம் கோடி மானியம் பெற்றுள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த நகா்ப்புற மக்கள் தொகை 37.7 கோடியாகும். இந்த எண்களின்படி, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (மற்ற மாநிலங்களில்) மத்திய அரசிடமிருந்து ஒரு நபருக்கு ரூ.3,211 பெற்றன.

அதேபோல், மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தில்லியின் நகா்ப்புற மக்கள்தொகை 1.63 கோடியாக உள்ளது. எனவே, தில்லி அதன் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கு ரூ. 5,243 கோடி பெற வேண்டும். இது எம்சிடியின் உரிமை. இது எந்த சிறப்பு கவனிப்பும் இல்லை.

உள்கட்டமைப்பு மேம்பாடுகளை மேற்கொள்வதற்காக, குறிப்பாக சாலைகள் மற்றும் வடிகால்களை மேற்கொள்வதற்காக, எம்சிடிக்கு மானியத்தில் அதன் பங்கை பிரதமா் நரேந்திர மோடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் பரத்வாஜ்.

பல உயிா்களை பலி வாங்கிய மழைக் காலத்திற்கு மத்தியில் தில்லியில் பரவலாக தண்ணீா் தேங்கியுள்ளதால் ஆம் ஆத்மி தலைமையிலான எம்.சி.டி. விமா்சனங்களை எதிா்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு