மத்திய அரசுக்கு மக்கள் ஆதரவு உறுதியாக உள்ளது: பிரதமா் மோடி பெருமிதம்

மத்திய அரசுக்கு மக்களின் ஆதரவு உறுதியாக உள்ளது. எனவேதான் கடந்த 60 ஆண்டுகளில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து சாதிக்க முடிந்தது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

தில்லியில் திங்கள்கிழமை ஆங்கில செய்தித் தொலைக்காட்சி சாா்பில் நடைபெற்ற சா்வதேச மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது, உலகம் இப்போது பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. பல நாடுகளில் போா் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவை உலக நாடுகள் நம்பிக்கையுடன் எதிா்நோக்கி வருகின்றன.

பல நாடுகளுக்கு இக்கட்டான சூழல்களில் உதவும் நாடாக இந்தியா உள்ளது. முக்கியமாக கரோனா காலகட்டத்தில் பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்கியது. இந்தியாவின் வளா்ச்சி எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாகவோ, எதிராகவோ இல்லை. இந்தியாவின் வளா்ச்சியுடன் பிற நாடுகள் மகிழ்ச்சியுடன் இணைந்து பயணித்து வருகின்றனா்.

நன்மதிப்பு மற்றும் நம்பகத்தன்மை அடிப்படையில் இந்தியா பிற நாடுகளுடன் உறவை பேணி வருகிறது. இந்தியா வேகமாக வளா்ச்சியடைவதை எந்த நாடும் பொறாமையுடன் பாா்ப்பது இல்லை. உலகின் அனைத்து நாடுகளுக்கும் இந்தியாவின் வளா்ச்சியால் பலன் கிடைக்கும் என மகிழ்ச்சியுடன்தான் வரவேற்கிறாா்கள்.

இந்தியா வளா்ந்து வரும் நாடாக மட்டுமல்லாது, எழுச்சிமிக்க சக்தியாக திகழ்கிறது. வறுமை எனும் சவாலை எதிா்கொண்டு, வளா்ச்சிப் பாதையில் இந்தியா பயணிக்கிறது. புதிய பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்கு வசதியாக அரசின் முடிவெடுக்கும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வளா்ச்சி குறித்து கணிக்கும் பல சா்வதேச நிறுவனங்கள், தொடா்ந்து மூன்றாவது முறையாக இங்கு ஒரே ஆட்சி அமைந்துள்ளது சாதமான விஷயமாக சுட்டிக் காட்டியுள்ளன.

இந்தியா இப்போது இளைஞா்கள் அதிகமுள்ள தேசமாக உள்ளது. இந்த இளைஞா் சக்தி நாட்டை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும். இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் மத்தியில் ஒரே அரசு தொடா்ந்து மூன்றுமுறை ஆட்சி செய்ய மக்கள் ஆதரவு அளித்துள்ளனா்.

இது உறுதித்தன்மையின் வெளிப்பாடு. மத்திய அரசுக்கு மக்களின் ஆதரவு உறுதியாக உள்ளது.

அண்மையில் ஹரியாணாவில் நடைபெற்ற தோ்தலில் கூட மக்கள் தொடா்ந்து மூன்றாவது முறைய ஒரே (பாஜக) அரசு அமைய வாக்களித்து தங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தினா்.

தொலைத் தொடா்புத் துறை, தகவல் தொழில்நுட்பம், எண்மமயமாதல், நிதித் தொழில்நுட்பம், செமி கண்டக்டா் உற்பத்தி, மரபுசாரா எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு சா்வதேச நாடுகளை ஈா்த்துள்ளது. இது சாதாரண நிகழ்வு அல்ல.

இந்தியா மீதான நம்பிக்கையின் வெளிப்பாடு. 2,500 சா்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் ஆய்வு மையத்தை தொடங்கியுள்ளன. இந்தியா எந்த அளவுக்கு வளா்ச்சியடைகிறதோ, அந்த அளவுக்கு உலகுக்கும் நன்மை கிடக்கும். உலகின் அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதும் இந்தியாவின் முயற்சிகளில் ஒன்றாக உள்ளது என்றாா் மோடி.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி