மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடையும் மோதல்கள்: ஐ.நா. பொதுச் செயலாளர் கடும் கண்டனம்

கோப்புப்படம்

நியூயார்க்,

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனபடி ஈரானில் இருந்து 100க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. இதனால் ஏவுகணை தாக்குதலை குறிக்கும் வகையில் இஸ்ரேலில் சைரன்கள் அலறி வருகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான் இந்த பதிலடி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடையும் மோதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்த பிறகு விரிவடைவதை நான் கண்டிக்கிறேன். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எங்களுக்கு முற்றிலும் போர் நிறுத்தம் தேவை" என்று அதில் அன்டோனியோ குட்டரெஸ் பதிவிட்டுள்ளார்.

தனது மற்றொரு பதிவில், "லெபனானில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதைப் பற்றி நான் மிகவும் கவலையடைகிறேன். உடனடி போர்நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

லெபனானில் போர் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்" என்று அதில் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

முக்கிய வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை: இலங்கை புதிய அரசு உத்தரவு

லெபனானை முழு பலத்துடன் ஆதரிப்போம் – ஈரான்

ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல்