மத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு கிடைக்கும் பலன்கள் – நிதி வல்லுனர்கள் தகவல்

சென்னை,

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால், அப்போது இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3-வது முறையாக பொறுப்பேற்று உள்ளதால், முழு பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில் தமிழகத்திற்கு என்று எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் வலியுறுத்தலால் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திற்கு ஒன்றுமே இல்லையா? என்பதற்கு நிதி வல்லுனர்கள் பதில் அளித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட்டின் மொத்த வருமானம் ரூ.46.80 லட்சம் கோடி. அதில் செலவு ரூ.48.20 லட்சம் கோடி ஆகும். மொத்தம் ரூ.1.40 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. மத்திய அரசின் வருவாயில் மிகப்பெரும் செலவாக வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மட்டும் ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு செலவு செய்கிறது. மீதமுள்ள தொகையில்தான் அனைத்து துறைகளுக்கும், மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது.

எந்த பட்ஜெட்டிலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்க மாட்டார்கள். ஆனால் ஒரு மாநிலத்தில் புதிதாக தொடங்கும் சில திட்டங்களை மட்டும் அறிவிப்பார்கள். அந்த வகையில் தமிழகத்திற்கு புதிதாக எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இது ஒரு பெரிய ஏமாற்றம்தான்.

ஆனாலும் வழக்கம்போல மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதி தமிழகத்திற்கு கிடைத்துவிடும். கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசின் வருவாயில் தமிழகத்திற்கு 4.96 சதவீதம் வழங்கப்பட்டது. அப்போது தமிழகத்திற்கு கிடைத்த தொகை ரூ.17 ஆயிரத்து 285 கோடி. ஆனால் இப்போது தமிழகத்திற்கு பகிர்வு 4.07 சதவீதம்தான்.

ஆனால் 2024-2025-ம் ஆண்டில் அதன் மூலம் கிடைக்கும் தொகை ரூ.50 ஆயிரத்து 873 கோடி ஆகும். அதில் தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு செல்லும் வருவாயும் பல மடங்கு அதிகரித்து இருப்பது என்பதையும் நினைவில் வைத்து கொள்ளவேண்டும்.

அதேபோல் மத்திய அரசு துறை ரீதியாக அறிவித்த பல திட்டங்களில் தமிழகம்தான் அதிகளவில் பயன் பெற போகிறது. விவசாய துறையின் கீழ் எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பலன் அதிகளவில் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்தியாவில் சிறு, குறு, தொழில்களில் தமிழகம்தான் முன்னணி. இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிக அளவில் சலுகைகளை வாரி வழங்கி உள்ளது. எனவே இவற்றின் பலன்களை தமிழகத்தில் உள்ள நிறுவனங்களுக்குதான் கிடைக்க போகிறது.

அதேபோல் செல்போன் போன்ற மின்னணு பொருட்கள், ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்ட வரிச்சலுகைகள் மூலம் தமிழகத்தில் இந்த பொருட்களின் தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்கள் பெருமளவில் பயன் அடையும். அதேபோல் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதன் தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழக மக்களுக்கு பலன் கிடைக்கும். அதேபோல் உள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயில கல்வி கடன் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கடன் பெறுவதிலும் தமிழகம் முன்னணியில் இருப்பதால் தமிழக மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அது தவிர குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம், வீடுகள் கட்டும் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் கிசான் திட்டம், பயிர் காப்பீடு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ரூத் திட்டம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழக மக்களுக்கு அதிகளவில் பலன் கிடைக்கும்.

எனவே இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்கபடவில்லையே தவிர, தமிழகத்திற்கான பலன் அதிகளவில் இருக்கத்தான் போகிறது. அதேவேளையில் சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.62 ஆயிரம் கோடி செலவில் நடந்து வருகிறது. அதில் மத்திய அரசின் பங்குத்தொகை ஒதுக்கீடு செய்யாததால், அந்த தொகையை தமிழக அரசுதான் தற்போதைய நிலையில் செலுத்த வேண்டி வரும். எனவே தமிழக அரசின் நிதி நிலையில் சிக்கல் ஏற்படும். அதேபோல் புதிதாக தமிழகத்திற்கு ரெயில் திட்டங்கள் எதுவும் அறிவிப்பு செய்யவில்லை. ஏற்கனவே நடைபெறும் திட்டங்களுக்குதான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி