மத்திய மந்திரி பதவி வேண்டாம்: சுரேஷ் கோபி பரபரப்பு பேட்டி

திருவனந்தபுரம்,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, 18 இடங்களிலும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜனதா தலா ஒரு தொகுதியில் வென்றன.

திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி, 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலமாக கேரளாவில் தனது முதல் வெற்றிக் கணக்கை பா.ஜனதா தொடங்கியது. சுரேஷ் கோபியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர் கே. முரளீதரன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

கேரளாவின் முதல் பா.ஜனதா எம்.பியான சுரேஷ் கோபிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுரேஷ் கோபி அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த நிலையில், தனக்கு மத்திய மந்திரி பொறுப்பு வேண்டாம் என இன்று கூறியுள்ளார். மலையாள தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சுரேஷ் கோபி கூறியதாவது:- நான் எம்.பியாகவே பணி செய்ய விரும்புகிறேன். எனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்றுதான் கூறி வந்தேன். ஆனால் கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதால் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டேன். எனக்கு மந்திரி பதவியில் நாட்டம் இல்லை. எனவே, என்னை பொறுப்பில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புகிறேன்" என்றார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்