மனைவி திருநங்கையா? மருத்துவப் பரிசோதனைக்காக நீதிமன்றம் நாடிய கணவர்!

தில்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவிக்கு அரசு மருத்துவமனையில், பரிசோதனை செய்து பாலினத்தை உறுதிப்படுத்துமாறு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தனது மனைவி திருநங்கை என குற்றம் சாட்டியுள்ள கணவர், திருமணத்துக்கு முன்பு பாலின மாறுபாடு குறித்து கூறாமல், ஏமாற்றி தன்னைத் திருமணம் செய்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாலின மாறுபாடு குறித்து மறைத்தது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், திருமணத்துக்குப் பிறகு தனக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை சந்தித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தில்லி உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்த வழக்குரைஞர் அபிஷேக் குமார் செளதரி தெரிவித்ததாவது, ''தனிநபரின் பாலினம் அல்லது பாலின அடையாளம் என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனினும், திருமணம் என்று வரும்போது இருவரும் ஒவ்வொருவரைப் பற்றி தெரிந்துகொள்வது அவர்களின் உரிமை.

ஆரோக்கியமான மற்றும் அமைதியான திருமண வாழ்க்கையை உறுதிப்படுத்தும், இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் இரு தனிநபர்களின் வாழ்க்கைக்கான அடிப்படை உரிமைகளை சமநிலைப்படுத்துவதும், மதிப்பதும் முக்கியம்'' எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து மனுதாரர் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உரிய பரிசோதனை மூலம் உண்மையை அறிந்துகொள்வது மனுதாரரின் அடிப்படை உரிமை எனக் குறிப்பிட்டது.

பரிசோதனையில், மனைவி, பெண் எனத் தகுதி பெறவில்லை என்றால், மனுதாரர் பராமரிப்பு செலவை அளிக்கவோ அல்லது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சினை சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவோ ​​தேவையில்லை என்று வலியுறுத்தியது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி