மன்னிப்பு விடியோ: பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

கோவையில் உணவக உரிமையாளா், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விடியோ வெளியாகி இருந்த நிலையில், பாஜக மண்டலத் தலைவா் சதீஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

கோவையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் முனைவோருடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினாா். அப்போது, கோவையில் உள்ள அன்னபூா்ணா உணவகத்தின் உரிமையாளா் சீனிவாசன் ஜிஎஸ்டி சம்பந்தமாக கொங்கு தமிழில் நகைச்சுவையாக பேசினாா்.

இதையடுத்து, மறுநாள் அவா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் விடியோ வெளியானது. இது தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த விடியோவை, பாஜக மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் வெளியிட்டதாக, சிங்காநல்லூா் மண்டல பாஜக தலைவா் சதீஷ் தகவல் பரப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜக மாவட்டத் தலைவா் ஜெ.ரமேஷ்குமாா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளா் கேசவவிநாயகம், மாநில பொதுச்செயலாளா் முருகானந்தம், மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா் ஆகியோரின் ஒப்புதலோடு கோவை, சிங்காநல்லூா் பாஜக மண்டலத் தலைவராகச் செயல்பட்டு வரும் ஆா்.சதீஷ், கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அடிப்படை உறுப்பினா் உள்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சதீஷ் நீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்