மராட்டிய சட்டசபை தேர்தல்: கடைசி நாளில் விறுவிறுப்பு – 7,995 பேர் வேட்பு மனு தாக்கல்

வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீது இன்று (புதன்கிழமை) பரிசீலனை செய்யப்படுகிறது.

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய ஆளும் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இதில் இரு கூட்டணியிலும் தொகுதி பங்கீடில் கடும் இழுபறி நிலவியது. மகாயுதி கூட்டணியில் பா.ஜனதா அதிக இடங்களில் போட்டியிட விரும்பியது. எனினும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் முடிந்தவரை பேசி அதிக தொகுதிகளை பா.ஜனதாவிடம் பெற்றுக்கொண்டனர். எனினும் சுமார் 10 தொகுதிகளில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.

இதேபோல மகாவிகாஸ் அகாடி கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி நிலவி வந்தது. உத்தவ் சிவசேனா வெளிப்படையாக காங்கிரசுக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தியது. மகாவிகாஸ் கூட்டணியில் 20-க்கு அதிகமான தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர். இழுபறி நீடித்தவற்றில் ஒருசில இடங்களை தவிர மற்ற தொகுதிகளில் கடைசி நேரத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

இந்தநிலையில் கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் போட்டி போட்டு கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். தாராவி தொகுதியில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராகவே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த பாபுராவ் மானே வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பா.ஜனதாவின் எதிர்ப்பையும் மீறி முன்னாள் மந்திரி நவாப் மாலிக் தேசியவாத காங்கிரஸ் சார்பில் மான்கூர்டு – சிவாஜிநகர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல போரிவிலி பா.ஜனதா வேட்பாளர் சஞ்சய் உபாதய், பா.ஜனதா அதிருப்தி வேட்பாளர் கோபால் ஷெட்டி வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, மூத்த தலைவர் பாலாசாகேப் தோரட் உள்ளிட்ட தலைவர்களும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நேற்று இரவு 9 மணி வரை மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 905 வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. சில வேட்பாளர்கள் 2-3 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். எனவே வேட்பாளர்கள் எண்ணிக்கையை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் மொத்தம் 7 ஆயிரத்து 995 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீது இன்று (புதன்கிழமை) பரிசீலனை செய்யப்படுகிறது.

Related posts

அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை!

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கு திருமணம்!

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!