மருத்துவக் காப்பீடு: ஜிஎஸ்டியை குறைக்க ஆய்வு

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கான தவணை தொகை (ப்ரீமியம்) மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து ஆய்வு செய்ய அமைச்சா்கள் குழு அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து நவம்பரில் நடைபெறும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்படும் என்றும் அவா் கூறினாா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 54-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி, கோவா மற்றும் மேகாலய முதல்வா்கள், அருணாசல பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம், தெலங்கானா மாநிலங்களின் துணை முதல்வா்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் டிரஸ்டுசுமாப் டிரக்ஸ்டிகன், ஆசிமா்டினிப், டுா்வாலுமாப் ஆகிய புற்றுநோய் மருந்துகள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.

காா் இருக்கைகளுக்கு 28% ஜிஎஸ்டி: காா் இருக்கைகளுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி 28 சதவீதமாக உயா்த்தப்படவுள்ளது. இருசக்கர வாகனங்களின் இருக்கைகளுக்கு ஏற்கெனவே 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் நிலையில், அதற்கு இணையாக காா் இருக்கைகளுக்கான ஜிஎஸ்டியை உயா்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, ஆயுள் காப்பீடு தவணை தொகைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களித்தல், மருத்துவக் காப்பீடு தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைத்தல் அல்லது அந்த ஜிஎஸ்டியை செலுத்துவதில் இருந்து மூத்த குடிமக்கள் போன்றவா்களுக்கு விலக்களித்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு தவணை தொகைக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவாதங்களில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினா். இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியும் கடிதம் எழுதினாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடா்பான விவகாரங்களை முழுமையாக ஆராய்வதற்கு அமைச்சா்கள் குழு அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தது.

அக்டோபருக்குள் அறிக்கை: தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பிகாா், மேகாலயம், கோவா, பஞ்சாப், குஜராத் மாநிலங்களின் அமைச்சா்கள் அந்தக் குழுவில் உறுப்பினா்களாக இருப்பா். இந்தக் குழு ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து நிகழாண்டு அக்டோபருக்குள் அறிக்கை சமா்ப்பிக்கும்.

அரசு நிறுவனம் அல்லது ஆராய்ச்சிக் கூட்டமைப்பு, பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது வருமான வரிச் சட்டம் 1961-இன் 35-ஆவது பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இதர நிறுவனங்கள் வழங்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தது.

மின் இணைப்பு…: மின்சார இணைப்புக்கான விண்ணப்பக் கட்டணம், மின்சார மீட்டா்களுக்கான வாடகை கட்டணங்கள், மீட்டா்கள்/ மின்மாற்றிகளுக்கான பரிசோதனை கட்டணங்கள் உள்ளிட்டவற்றுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்க கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி விதிமுறைகள் 2017-இன் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தது.

நவம்பா் கூட்டத்தில் முடிவு: இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து ஆய்வு செய்ய அமைச்சா்கள் குழு அமைக்கப்படும்.

இந்தக் குழுவுக்கு பிகாா் துணை முதல்வா் சாம்ராட் செளதரி தலைமை வகிப்பாா். அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து நவம்பரில் நடைபெறும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்படும்.

தற்போது இரு காப்பீடுகளுக்கான தவணை தொகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் நிலையில், அதைக் குறைக்க மாநிலங்களுக்கு இடையே கருத்து ஒற்றுமை நிலவுகிறது.

சில புற்றுநோய் மருந்துகளுடன் கேதாா்நாத் யாத்திரைக்கான ஹெலிகாப்டா் பயணங்கள் மற்றும் நொறுக்குத்தீனிக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை குறைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றாா்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்