மருத்துவமனையில் அனுமதி.. ரஜினி எப்படி இருக்கிறார்?

சென்னை: திங்கள்கிழமை நள்ளிரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஜினி எப்படி இருக்கிறார், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனையிலிருந்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினிக்கு, கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்து வந்துள்ளது. அடிவயிறு சற்று வீக்கம் ஏற்பட்டு வலியும் இருந்து வந்த நிலையில்தான், மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகளையும் சில மருத்துவப் பரிசோதனையும் எடுத்துக்கொண்டுள்ளார்.

மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், நேற்று இரவு, ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அதில் ஏதேனும் பிரச்னை இருக்குமா என்ற கோணத்தில்தான் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனையில், சிறுநீரகத்துக்கு செல்லும் நரம்பில் சதை வளர்ந்து இருப்பதால், அதுதான் வீக்கம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதய சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் துறை நிபுணர்கள், சிறுநீரக சிகிச்சை மருத்துவர்கள் என பல துறை மருத்துவர்கள் இணைந்து ரஜினிக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி அக்டோபர் 1ஆம் தேதி அதிகாலை ரஜினிக்கு சிகிச்சை தொடங்கியது. சதை வளர்ந்திருக்கும் அந்த நரம்புப் பகுதியில் சிகிச்சை செய்து, அங்கு ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரஜினியின் தொடைப் பகுதியில் இருந்து நரம்பு வழியாக ஸ்டென்ட் உள்செலுத்தப்பட்டு காலை 5 மணிக்குத் தொடங்கிய அறுவை சிகிச்சை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க.. நெய் என நாம் சாப்பிடுவது எல்லாம் நெய்தானா?

ஸ்டென்ட் என்பது, பொதுவாக, ரத்த நாளங்களுக்குள் அடைப்பு ஏற்படும்போது, கை அல்லது தொடையில் நரம்பு வழியாக அவ்விடத்தை சரி செய்து, ஸ்டென்ட் பொருத்தி, ரத்தக் குழாயின் பாதையை சீராக்கப் பயன்படுகிறது. பொதுவாகவே ரத்த நாளங்கள் அல்லது நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு இந்த ஸ்டென்ட் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, ஸ்டென்ட் என்றாலே இதயம் தொடர்பான பிரச்னை என்று தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், ஸ்டென்ட் என்பது இதயத்துக்குதான் பரவலாக பொறுத்தப்பட்டு வந்துள்ளதால் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது.

ரஜினிக்கு சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவர் ஒரு சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். பிறகு அவர் வழக்கம் போல தனது பணிகளைத் தொடர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தான் அவரது ரசிகர்களும் விரும்புகிறார்கள். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று லட்சோப லட்ச ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. இது அவரது 170வது படமாகும். அடுத்து 171வது படமாக கூலி உருவாகி வருகிறது. அண்மையில் கூட ரஜினி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூலி படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு கடந்தவாரம்தான் சென்னை திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி ஊடகங்கள் வாயிலாக ரசிகர்களுக்குத் தெரிய வந்த நிலையில், ரஜினி விரைவாக உடல்நலம் அடைய வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது ரஜினி உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் செவ்வாயன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்பட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!