மருத்துவர்கள் பேச்சுவார்த்தை: நேரலைக்குத் தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்

கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் பேச்சுவார்த்தையை நேரலை ஒளிபரப்புக்குத் தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தையை நேரலை செய்ய வேண்டுமென்று பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டடத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பொதுமக்களின் விருப்பம் என்பதால் நேரலை ஒளிபரப்பிற்குத் தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கின் விசாராணையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கின் விசாராணை இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது, முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐயிடம் புதிய நிலை அறிக்கையை நீதிமன்றம் கோரியது. மேலும், இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரவுகளையும் சிபிஐயிடம் காவல் துறையினர் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

இதில், மேற்கு வங்க அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், மருத்துவர்கள் உடனான அரசின் பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரினார். மேலும், பெண் வழக்குரைஞர்கள் மிரட்டலுக்கு ஆளாவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் உச்சநிதிமன்றம் இதனை ஏற்க மறுத்துவிட்டது.

மருத்துவர்களின் பேச்சுவார்த்தை என்பது மக்களின் விருப்பம் என்பதால், நேரலைக்குத் தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஆதாரங்களை சிபிஐ அழிக்கவில்லை

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படம் விக்கிபீடியாவில் இன்னும் இருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் எனவும் கோரினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படத்தை நீக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இது தொடர்பாக உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பிறப்பிக்க வேண்டும் என மாநில அரசுக்கு அறிவுறுத்தியது.

மேலும், இந்த வழக்கில் ஆதாரங்களை அழிக்க சிபிஐ முயற்சிப்பதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த உச்சநீதிமன்றம், பயிற்சி மருத்துவர் பாலியல் – கொலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க காவல் துறைக்கு உத்தரவிட்டது.

சம்பவத்தில் தொடர்புடையதாக பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரின் தந்தை வெளியிட்ட கடிதத்தை முதன்மையாகக் கொண்டு விசாரிக்கவும் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சிலரை அணுக்கியுள்ளதாகவும், அவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கு! சினிமா நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தலைமறைவு!

பெண்கள் மீதான கட்டுப்பாட்டை நீக்க உத்தரவு

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பெண் மருத்துவர்களுக்கு தங்கள் பணியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனைக் குறிப்பிட்ட நீதிமன்றம், பெண் மருத்துவர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக கட்டுப்படுத்தும் மற்றும் இரவுப் பணியைத் தடை செய்யும் இரண்டு உத்தரவுகளை நீக்கி புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அப்போது வாதிட்ட கபில் சிபல், இந்த உத்தரவு தற்காலிகமானது என்றும், பெண் மருத்துவர்கள் பணிநேரம் மற்றும் கட்டுப்படுகள் தொடர்பாக விரைவில் புதிய அறிவிப்பை மாநில அரசு வெளியிடும் எனவும் குறிப்பிட்டார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்