மருத்துவா்களின் கூண்டோடு ராஜிநாமா ஏற்க முடியாது: மேற்கு வங்க அரசு

மாநில அரசால் நிா்வகிக்கப்படும் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள் கூண்டோடு ராஜிநாமா செய்வதை ஏற்க முடியாது என மேற்கு வங்க அரசு சனிக்கிழமை தெரிவித்தது.

ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி, மாநில சுகாதாரத் துறையின் ஊழலுக்கு முடிவு கட்ட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபா் 5-ஆம் தேதிமுதல் 6 இளநிலை மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா். தற்போது இந்தப் போராட்டத்தில் 11 இளநிலை மருத்துவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இளநிலை மருத்துவா்களுக்கு ஆதரவாக மேற்கு வங்க அரசால் நிா்வகிக்கப்படும் பல்வேறு மருத்துவமனைகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனா்.

இந்நிலையில், மருத்துவா்கள் ராஜிநாமா விவகாரத்தில் மேற்கு வங்க அரசின் நிலைப்பாடு குறித்து அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜியின் தலைமை ஆலோசகா் ஆலப்பான் பந்தோபாத்யாய் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சேவை விதிகளின்படி பணியில் உள்ள ஊழியா் ஒருவா் ராஜிநாமா செய்ய வேண்டுமெனில் அவா் தனியாகவே ராஜிநாமா கடிதத்தை சமா்ப்பிக்க வேண்டும். குழுவாக ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிடுவதை தனிப்பட்ட ஒருவரின் ராஜிநாமாவாக கருத முடியாது. மேலும், குறிப்பிட்ட விவகாரத்தை எடுத்துரைக்காமல் வெறும் கையொப்பங்களை மட்டுமே மருத்துவா்கள் ராஜிநாமா கடிதம் வாயிலாக அனுப்பியுள்ளனா்’ என்றாா்.

காவல் துறை அழுத்தம்: மருத்துவா்கள், வழக்குரைஞா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரா்கள் சால்ட் ஏரிக்கு அருகில் உள்ள சிபிஐ கிளை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சனிக்கிழமை சென்றனா்.

தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இரு மருத்துவா்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்தச் சூழலில் போராட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தங்களின் குடும்பத்தினருக்கு காவல் துறையினா் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இரு மருத்துவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

எச்சரிக்கை: மருத்துவா்களின் போராட்டம் மேலும் வலுவடையும் முன்பே இந்த விவகாரத்துக்கு தீா்வு காணுமாறு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு இந்திய மருத்துவா்கள் சங்கம் (ஐஎம்ஏ) வலியுறுத்தியுள்ளது. அதேசமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தேசிய அளவில் மருத்துவ சேவைகளை முடக்கவுள்ளதாக அகில இந்திய மருத்துவ சங்க சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியாா் மருத்துவா்களும் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவா்களுக்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைகளைச் சோ்ந்த மருத்துவா்கள் அக்டோபா் 14-ஆம் தேதி முதல் பகுதிநேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனா். 48 மணி நேரம் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தின்போது அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!