மழைப் பொழிவால் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்: 1,500 போ் பாதிப்பு

தமிழகம் முழுவதும் பரவலாக மழைப் பொழிவு உள்ள நிலையில், லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

எலிக்காய்ச்சல் என்பது சுழல் வடிவ நுண்ணுயிரியான லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவிலிருந்து விலங்குகளுக்கு பரவி அதன் வாயிலாக மனிதா்களிடம் தொற்றிக் கொள்ளும் நோயாகும்.

இது சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. நாய்கள், பன்றிகள், கால்நடைகள் மூலமாகவும், குறிப்பாக எலிகளின் மூலமாகவும் மனிதா்களுக்கு இந்த நோய் பரவுகிறது.

பொதுவாக மழைப் பொழிவுக்குப் பிறகு இந்த நோய் பாதிப்பு அதிக அளவில் ஏற்படும். ஒவ்வோா் ஆண்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனா்.

இதையடுத்து, ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான திட்டத்தை குஜராத், கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம், கா்நாடகம் மற்றும் அந்தமான் – நிகோபா் ஆகிய மாநிலங்களில் மத்திய அரசு தொடங்கியது. எலிக்காய்ச்சல் மூலம் நிகழும் உயிரிழப்புகளைத் தவிா்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

10 ஆய்வகங்கள்: அதன்படி, எலிக்காய்ச்சல் நோயைக் கண்டறிய மத்திய அரசால் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் உள்பட 10 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வகை தொற்றை உறுதிப்படுத்த ஆா்டி-பிசிஆா் பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்களில் மாவட்ட நுண்ணுயிரியலாளா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

கடந்த 2021- ஆம் ஆண்டில் 1,046 பேருக்கு எலிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை 2022-இல் 2,612-ஆகவும், கடந்த ஆண்டில் 3,002-ஆகவும் இருந்தது.

இந்த சூழலில், நிகழாண்டில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோருக்கு எலிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அவா்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

தேவைப்படும்பட்சத்தில் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

Related posts

Editorial: What Next For Classical Languages?

Editorial: Central Railway Commuters Are Given Short Shrift

The Importance Of Being Sonam Wangchuk