ஜார்க்கண்ட் அரசு மாஃபியாக்களின் அடிமையாகிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற நவ. 13 மற்றும் 20ஆம் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலும் ஆளும் இந்தியா கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும் நேரடியாக மோதுகின்றன.
இதையும் படிக்க : மகாராஷ்டிர தேர்தலில் திருப்பம்! வேட்பாளர்களை திரும்பப் பெற்றார் மனோஜ் ஜரங்கே
இரு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கர்வாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஜார்க்கண்டின் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுக்காவும் விவசாயிகளின் தொழில்களை வலுப்படுத்தவும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு முட்டுக்கட்டை போட்டபோதும், மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. நாங்கள் ஆட்சி அமைத்தால் இரட்டை வேகத்தில் வளர்ச்சி அடையும்.
ஜார்க்கண்டில் மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டம் என்ன ஆனது என்று நீங்கள் மாநில அரசிடம் கேட்க வேண்டும். நாடு முழுவதும் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று மக்களவை தேர்தலின் போது வாக்குறுதி அளித்தேன். தற்போது ஜார்க்கண்டுக்கு 21 லட்சம் வீடுகளை கட்டித் தர பாஜக தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு ஏழைக்கும் வீடு என்பதே பாஜகவின் உத்தரவாதம்.
ஜார்க்கண்டில் அரசாங்கத்தை அமைத்தால், 3 லட்சம் அரசுப் பணிகளை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்புவோம். சமீபகாலமாக வதந்திகளைப் பரப்புவது பெரிய வணிகமாக உள்ளது. நீங்கள் அதனை நம்ப வேண்டாம்.
ஜார்க்கண்ட் அரசு மாஃபியாக்களின் அடிமையாகிவிட்டது. மக்களவை வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கின்றனர். உங்களின் ஒவ்வொரு வாக்கும் காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணியால் உருவாக்கப்பட்ட மாஃபியா அமைப்பை பாதிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
ஆளும் கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும் ஊடுருவல்காரர்களை ஆதரிக்கின்றனர். ஜார்கண்ட் முழுவதிலும் அவர்களை குடியேற வைக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.