மாடுகளைக் கடத்திய லாரியில் எலுமிச்சை?

மாடுகளைக் கடத்திய லாரியில் எலுமிச்சை?மாடுகளை கடத்தியதாகக் கூறி தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயம்

மாடுகளை கடத்தியதாகக் கூறி, சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஹரியானாவைச் சேர்ந்த சோனு பன்ஷிராம் மற்றும் சுந்தர் சிங் ஆகிய இருவரும் கடந்த வாரம் ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தின் வழியே லாரியில் எலுமிச்சை பழங்களை ஏற்றிச் சென்றுள்ளனர். அவர்கள் செல்லும் வழியில் மழை பெய்து கொண்டிருந்ததால், லாரியை நிறுத்தியுள்ளனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து, அவர்கள் லாரியை இயக்கியுள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த ஒருவர், சோனுவும் சுந்தரும் அப்பகுதியில் இருந்த மாடுகளைக் கடத்திக் கொண்டு செல்வதாக நினைத்து கூச்சல் எழுப்பியுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்தோர் லாரியை விரட்டிச் சென்றுள்ளனர்.

லாரியின் பின்னால் சிலர் விரட்டி வருவதனைப் பார்த்த சோனு, நெடுஞ்சாலையில் கொள்ளையர்கள் விரட்டுவதாக எண்ணி, லாரியை வேகமாக இயக்கியுள்ளார். ஆனால், லாரியை விரட்டிச் சென்ற அப்பகுதி மக்கள் ஒரு சுங்கச்சாவடி அருகே லாரியை மடக்கிப் பிடித்து, சோனுவையும் சுந்தரையும் தாக்கியுள்ளனர்.

பின்னர், லாரியை சோதனை செய்தபோது, லாரியில் மாடுகள் இல்லை; எலுமிச்சை பழங்கள் தான் உள்ளது என்று அறிந்தவுடன் இருவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இருவரையும் தாக்கியவர்களே அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் சோனுவுக்கு இரு கால்களிலும் எலும்பு முறிவுகளும், சுந்தருக்கு தலையிலும் கைகளில்ம் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விடியோவானது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சம்பவம் நடந்த இரு நாள்களுக்கு பிறகு, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்