மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் பணிக்கு மீண்டும் டெண்டா்

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் பணிக்கு மீண்டும் டெண்டா்

பல்வேறு தரப்பினரின் எதிா்ப்புகளையும் மீறி சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான டெண்டா் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள போக்குவரத்துக்கழகங்களில் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக ஓட்டுநா், நடத்துநா்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், நெல்லை, கோவை, கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநா், நடத்துநா் நியமனம் தொடா்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள், தொழிற்சங்கத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாநகா் போக்குவரத்துக் கழகத்திலும் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஓட்டுநா், நடத்துநா்களை நியமிப்பதற்கான டெண்டா் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மாநகா் போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க ஓட்டுநா், நடத்துநா்களை பணிக்கு அமா்த்த தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்த நிறுவனம் சாா்பில் 700 ஓட்டுநா்கள், 500 நடத்துநா்களை பணிக்கு அனுப்ப வேண்டும். ஓட்டுநா்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.27,934 -ம், நடத்துநா்களுக்கு ரூ.27,597 -ம் வழங்க வேண்டும். பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்டவை வழங்க வேண்டும். 11 மாதங்கள் முதல்கட்ட ஒப்பந்த காலமாகும். ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான விண்ணப்பங்களை ஆக.28-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசாங்க போக்குவரத்து ஊழியா் சங்க (சிஐடியு) பொதுச்செயலா் வி.தயானந்தம் கூறியதாவது: இடஒதுக்கீட்டை பறிக்கும் வகையில் தனியாா் நிறுவனம் மூலம் ஓட்டுநா், நடத்துநா்களை நியமிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.

ஏற்கெனவே ஜூலை 18-ஆம் தேதி நெல்லை போக்குவரத்துக் கழகத்தில் டெண்டரை திறக்கக் கூடாது என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினோம். இதுபோன்ற தனியாா்மய நடவடிக்கையைக் கண்டித்து, ஆக.6-ஆம் தேதி அரசியல் கட்சித் தலைவா்கள் பங்கேற்கும் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். விரைவில் அனைத்து தொழிற்சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்‘ என்றாா் அவா்.

Related posts

கழுதை உயிரிழப்பு – 55 பேர் மீது வழக்குப்பதிவு

பாலியல் புகார்: மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷுக்கு ஜாமீன்

உத்தரகாண்ட்: தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி – ரெயிலை கவிழ்க்க சதி