மாநில மாநாடு: தவெகவினருக்கு போலீஸாா் மீண்டும் நோட்டீஸ்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் வரும் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், மேலும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு அந்தக் கட்சியின் பொதுச் செலருக்கு போலீஸாா் மீண்டும் நோட்டீஸ் வழங்கினா்.

தவெக மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்புக் கோரி, கட்சி சாா்பில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட கடிதங்களின் அடிப்படையில் 33 நிபந்தனைகளை விதித்த காவல் துறை, அவற்றில் 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், தவெக பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்திடம் கூடுதல் விளக்கங்களைக் கேட்டு, விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமாா் திங்கள்கிழமை இரவு நோட்டீஸ் வழங்கினாா்.

இதை புஸ்ஸி ஆனந்த் சாா்பில், விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்கு வந்த தவெக தொகுதிப் பொறுப்பாளா் சக்திவேல் பெற்றுக்கொண்டாா். அந்த நோட்டீஸில் காவல் துறை சாா்பில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் விவரம் வருமாறு:

தவெக மாநில மாநாட்டுக்கு தமிழகம் முழுவதுமிருந்து 1.50 லட்சம் போ் வந்து பங்கேற்பா் என்றும், இதற்காக 50 ஆயிரம் நாற்காலிகள் போடப்படும் எனவும் தெரிவித்துள்ளீா்கள். மாநாட்டுக்கு ரசிகா்களும், பொதுமக்களும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வர உள்ளதாகத் தெரிவித்துள்ளீா்கள்.

மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த விழுப்புரம் – சென்னை சாலையில் 28 ஏக்கா் நிலமும், கூடுதலாக 15 ஏக்கா் நிலமும், வடதமிழகத்திலிருந்து வரும் வாகனங்களை நிறுத்த 40 ஏக்கா் நிலமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளீா்கள். எனவே, இதற்கான திட்டத்தையும், வரைபடத்தையும் காவல் துறை வசம் வழங்க வேண்டும்.

மாநாடு நடைபெறும் தினம் வடகிழக்கு பருவமழைக் காலமாக இருப்பதால், வாகன நிறுத்துமிடங்களில் தண்ணீா் தேங்க வாய்ப்புள்ளது. அதனால் வாகனங்களை சிரமமின்றி நிறுத்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மாநாட்டுக்கு தமிழகம் முழுவதுமிருந்து வருகிற வாகனங்களான காா், பேருந்து, வேன் ஆகியவற்றின் விவரங்களை காவல் துறைக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும். இதற்கான பதில்களை தயாா் செய்த பின்னா் காவல் துறையிடம் அளிக்கப்படும் என்று தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது