மாரடைப்பு யாருக்கெல்லாம் ஏற்படும்? – நம்பிக்கையும் உண்மையும்!

ரிஷிதா கன்னா

மாரடைப்பு இளம் வயதினருக்கும் ஏற்படுமா? உடலில் அதிக கொழுப்பு கொண்டவர்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்படுமா?

மாரடைப்பு குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் போர்டிஸ் மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் டாக்டர் ஆர். கேசவா.

மாரடைப்பு வயதானவர்களுக்கு ஏற்படும்.

மாரடைப்பு ஏற்படுபவர்களில் 5ல் ஒருவர், 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கிறார். இதய நோய்கள் வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய்கள் இருந்தால், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, புகைப்பழக்கம், உடல் பருமன், நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இளம் வயதினருக்கு இதய நோய்க்கான எதிர்ப்பு சக்தி உள்ளது

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படாது என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் இதய நோய் இளம் வயதிலேயே தொடங்கிவிடுகிறது. இதயத் தசை மற்றும் இதய அமைப்புகளில் ஏதேனும் கோளாறுகள் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

உடலில் அதிக கொழுப்பு இருந்தால் மாரடைப்பு ஏற்படும்

அதிக கொழுப்பு கொண்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்தான். ஆனால், மாரடைப்பு ஏற்பட கொழுப்பு மட்டும் காரணமல்ல, மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

இதய செயல்பாட்டில் பிரச்னை இருப்பவர்களுக்கு ஏற்படும். மேலும் ஊட்டச்சத்து குறைவு, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், போதைப்பொருள் பழக்கம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும். உடலில் கொழுப்பு சரியான அளவில் இருந்தாலும் மாரடைப்பு ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் அறிகுறிகள் தோன்றும்

சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர் நெஞ்சு வலி, மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். இளம் வயதினரில் உடல் பருமனாவது, லேசான தலைவலி, குளிர்ந்த வியர்வை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இளம் வயதினருக்கு தீவிர மாரடைப்பு ஏற்படும்

இளம் வயதினருக்கு மாரடைப்பு தீவிரமாகவும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. ஏனெனில் இளம் வயதினர் மிகவும் தாமதமாகவே மருத்துவமனைகளுக்கு வருகின்றனர்.

தங்களுக்கு மாரடைப்பு ஏற்படாது என்றும் இந்த அறிகுறிகள் வேறு பிரச்னைகளுக்கானது என்றும் நினைக்கின்றனர். ஓரிரு நாள்கள் தாமதம் ஆனாலே, மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தும். எனவே, அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

தமிழில்: எம். முத்துமாரி

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!