பெங்களூரு: மாற்றுநில முறைகேடு தொடா்பாக புதன்கிழமை (நவ. 6) விசாரணைக்கு ஆஜராகும்படி முதல்வா் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்த திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து, லோக் ஆயுக்த முன்பு இன்று சித்தராமையா நேரில் ஆஜராகிறார்.
முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் மாற்றுநிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பி.எம்.பாா்வதி, மைத்துனா் மல்லிகாா்ஜுனசாமி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிந்து லோக் ஆயுக்த விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா கொடுத்த புகாரின் அடிப்படையில், பணப்பதுக்கல் தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பி.எம்.பாா்வதி, மைத்துனா் மல்லிகாா்ஜுனசாமி, நில உரிமையாளா் தேவராஜ் ஆகியோா் மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிக்க |திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
இந்நிலையில், மாற்றுநில முறைகேடு தொடா்பாக நவ. 6-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி முதல்வா் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்த திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு ‘விசாரணைக்கு நான் ஆஜராவேன்’ என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்திருந்தார்.
அதன்படி, புதன்கிழமை(நவ. 6) மைசூரில் உள்ள லோக் ஆயுக்தவில் ஆஜராவதற்காக புதன்கிழமை காலை சாலை மார்க்கமாக காரில் மைசூருவுக்கு புறப்பட்டு சென்றார். காலை 10 மணிக்கு மைசூரில் உள்ள லோக் ஆயுக்தவுக்கு முதல்வா் சித்தராமையா வருகை தரவுள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வா் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்த போலீஸாா் 2 மணி நேரம் விசாரணை நடத்தவுள்ளனா்.