மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன், வாழ்வே முடிந்துவிட்டது: மிஹிர் ஷா வாக்குமூலம்மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்று மும்பை சொகுசு கார் விபத்தை ஏற்படுத்திய மிஹிர் ஷா வாக்குமூலம் அளித்துள்ளார்.
மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன், வாழ்வே முடிந்துவிட்டது என மும்பையில் சொகுசு காா் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிவசேனை கட்சியைச் சேர்ந்த (ஷிண்டே பிரிவு) ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேரிட்ட சொகுசு கார் விபத்தில், மிஹிர் ஷாவிடம் மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் விசாரணையின்போது இவ்வாறு கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையின் விசாரணையின்போது, மிஹிர் ஷா, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், தான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டேன், எனது வாழ்வே முடிந்துவிட்டது என்று கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மும்பையின் வொா்லி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தம்பதி மீது மிஹிா் ஷா ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த காவேரி நக்வா(45) உயிரிழந்தாா். அவரின் கணவா் காயமடைந்தாா்.
தலைமறைவாக இருந்த மிஹிா் ஷா செவ்வாய்க்கிழமை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். அவா் தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட அவரது தந்தை ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
இந்நிலையில், காவல்துறையினா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சமா்ப்பித்த சிசிடிவி காட்சியில், வேகமாக மோதிய காரின் முன்பகுதியில் சிக்கி பெண்மணி 1.5 கி.மீ. தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது பதிவாகி இருந்தது. மேலும், மிஹிா் ஷா மற்றும் அவரது ஓட்டுநா் ராஜ்ரிஷி படாவத் காரின் முன்பகுதியிலிருந்து பெண்ணை அகற்றியதுடன் இருக்கைகளை இடம் மாற்றிக்கொண்டு தப்பிச் செல்லும் முன் சாலையில் கிடந்த பெண்ணின் மீது படாவத் மீண்டும் காரை ஏற்றியது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.
இந்த விபத்து நேரிட்ட இடத்துக்கு புதன்கிழமை மிஹிரை அழைத்துச் சென்ற காவல்துறையினர், விபத்துச் சம்பவத்தை மீண்டும் நடித்துக்காட்டச் செய்தனர்.
இந்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி, விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு இரண்டு மதுபானப் கூடங்களுக்குச் சென்று மது அருந்தியிருப்பதும், கார் ஓட்டுநரை இறங்கவைத்து மிஹிர் வாகனத்தை இயக்கியிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.