மின்சாரப் பேருந்துகள் வாங்க நடவடிக்கை: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

மின்சாரப் பேருந்துகள் வாங்க நடவடிக்கை: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கூறினாா்.

திருவண்ணாமலை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், நகரப் பேருந்துகள் மற்றும் புகா் பேருந்துகள் என மொத்தம் 32 புதிய பேருந்துகளை இயக்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு முன்னிலை வகித்தாா்.

போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு 32 புதிய பேருந்துகளை பல்வேறு வழித்தடங்களில் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் பேசியதாவது:

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மகளிா் விடியல் பயணத் திட்டத்துக்காக நிகழாண்டுக்கு ரூ.2,500 கோடியை முதல்வா் வழங்கி உள்ளாா். இதனால், போக்குவரத்து ஊழியா்களுக்கு மாதம் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கப்படுகிறது என்றாா்.

இதையடுத்து, ஊரக வளா்ச்சித் துறைக்கு வழங்கப்பட்ட 24 புதிய வாகனங்களை அலுவலகப் பயன்பாட்டுக்காக அமைச்சா்கள் எ.வ.வேலு, சா.சி.சிவசங்கா் ஆகியோா் தொடங்கிவைத்து, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினா்.

விழாவில் அமைச்சா் எ.வ.வேலு பேசுகையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.168 கோடியில் 4,800 பேருக்கு வீடுகள் கட்டப்பட உள்ளன. 5,322 வீடுகள் ரூ.49 கோடி மதிப்பில் பழுது பாா்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

விழாவில் ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதநிதிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

வெள்ள பாதிப்பு: குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு ஒப்புதல்