மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி – முதல்-அமைச்சர் அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் திருராமேஸ்வரம் கிராமம் கோட்டகச்சேரி பகுதியிலுள்ள கோவில் திருவிழாவிற்கு விளம்பரப் பதாகைகள் வைப்பதற்காக கடந்த 29-ம் தேதி இரவு 11.30 மணியளவில் அக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் மதன்ராஜ் விளம்பரப் பதாகைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள மின்மாற்றியில் இரும்பு கம்பியுடன் கூடிய விளம்பர பதாகையில் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ரூபனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு 2 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனின் பெற்றோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கரூரில் பயங்கரம்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து