மிா்பூா் டெஸ்ட்: வங்கதேசம் 106 ஆல் அவுட்

வங்கதேசத்தின் மிா்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்காவும் 140/6 ரன்களுடன் திணறி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இரு ஆட்டங்கள் தொடா் நடைபெறுகிறது. மிா்பூரில் முதல் டெஸ்ட் திங்கள்கிழமை தொடங்கியது.

வங்கதேசம் 106/10

டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தோ்வு செய்ய களமிறங்கிய பேட்டா்களால், தென்னாப்பிரிக்காவின் அபார பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் திணறினா்.

40.1 ஓவா்களிலேயே 106 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட்டானது. அந்த அணியில் தொடக்க பேட்டா் மஹ்முதுல் ஹாஸன் மட்டுமே 30 ரன்களை சோ்த்தாா். மற்ற வீரா்கள் வந்த வேகத்திலேயே சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா். பௌலிங்கில் தென்னாப்பிரிக்க தரப்பில் ரபாடா 3-26, வியான் முல்டா் 3-22, கேசவ் மகாராஜ் 3-34 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் தென்னாப்பிரிக்க வீரர்கள்

திணறும் தென்னாப்பிரிக்கா 140/6

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியும் திணறி வருகிறது. வங்கதேச பௌலா் டைஜுல் இஸ்லாமின் அற்புத பௌலிங்கை சமாளிக்க முடியாமல் ஆட்ட நேர முடிவில் 41 ஓவா்களில் 140/6 ரன்களை சோ்த்துள்ளது. அதிகபட்சமாக டோனி சோரி 30, ஸ்டப்ஸ் 23, ரிக்கல்டன் 27 ரன்களை எடுத்தனா். முல்டா் 17, கைல் வெரியன் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

டைஜூல் இஸ்லாம் அபாரம் 5 விக்கெட்

வங்கதேச பௌலா் டைஜுல் இஸ்லாம் அபாரமாக பந்துவீசி 5-49 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

முதல் நாள் முடிவில் 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது தென்னாப்பிரிக்கா.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி