மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்!

தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் விடியோவை வெளியிட்டு யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், பிரசவத்தின்போது எடுக்கப்பட்ட விடியோவை அவரது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2 நாள்களுக்கு முன்னதாக பதிவிட்ட அந்த விடியோவில், குழந்தையின் தொப்புள் கொடி வெட்டும் காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இர்ஃபானின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், இர்ஃபான் பதிவிட்ட விடியோவை நீக்கக் கோரி மருத்துவத் துறை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, துபை மருத்துவமனையில் பரிசோதனை செய்து அவரது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்ட இர்ஃபான், குடும்ப நிகழ்ச்சியில் அதனை வெளியிட்டு, விடியோவாக யூடியூப்பிலும் பதிவிட்டார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994-ன் படி இர்ஃபான் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, மன்னிப்பு கேட்டார்.

இதையும் படிக்க : மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்ஃபான்!

இந்த நிலையில், தொப்புள் கொடி வெட்டும் விடியோவை இர்ஃபான் பதிவிட்டது குறித்து பேசிய மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநர் மருத்துவர் ஜெ.ராஜமூர்த்தி, இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் பேசியதாவது:

“யூடியூபர் இர்ஃபான் என்பவர் மருத்துவமனையின் பிரசவ அறைக்கு கேமிராவை எடுத்துச் சென்று தனது மனைவியின் பிரசவத்தை பதிவிட்டுள்ளார். யூடியூபில் மேலும் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்தில், தனது தொப்புள் கொடியை அவரே வெட்டியுள்ளார். இது குற்றம்தான்.

மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்படும். அவரின் விளக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவச் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படும். தனியார் மருத்துவமனையின் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும். அதனை பொறுத்து மருத்துவமனையின் உரிமம் திரும்பப் பெறப்படும்.

இர்ஃபானின் பழைய புகாரும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொப்புள் கொடியை பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மட்டுமே வெட்ட வேண்டும்.

யூடியூப் பக்கத்தில் இருந்து விடியோவை உடனடியாக இர்ஃபான் நீக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி