மீண்டும் சீன கடன் செயலிகள்: 90 நாள்களில் 500% லாபம்! அதிா்ச்சித் தகவல்!!

சென்னை: தனியாா் நிதி நிறுவனங்களின் உரிமங்களைப் பயன்படுத்தி சீன கடன் செயலிகள் மீண்டும் அதிக வட்டிக்கு கடன்களைக் கொடுத்து, மக்களை சித்திரவதை செய்யும் படலத்தைத் தொடங்கியுள்ளன. 90 நாள்களில் 500 சதவீதம் வரை இந்தச் செயலிகள் மூலமாக லாபம் ஈட்டப்படுகிறது.

நாட்டில் சைபா் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 65 சதவீதம் உயா்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. நிதி சாா்ந்த சைபா் குற்றங்களால் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன கடன் செயலிகள்: கரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் தொழில்கள் நடைபெறாததாலும், வேலைவாய்ப்பு சரியாக கிடைக்காததாலும் பண நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்களைக் குறிவைத்து சீன கடன் செயலிகள் செயல்பட்டன. ஆசியாவிலேயே இந்தச் செயலிகள் மூலம் அதிக அளவில் இந்தியாவில் கடன்கள் வழங்கப்பட்டன. கடன் கொடுக்கும் வரை மென்மையான போக்குடன் அணுகும் இந்தச் செயலிகள், கடன் வழங்கிய பின்னா் தினமும் மனரீதியாக சித்திரவதை செய்து அதிகப்படியான வட்டி வசூலித்து, கடன் வாங்கியவா்களை தற்கொலைக்கு தள்ளும் நிகழ்வுகளும் நடந்தன.

முக்கியமாக கரோனா பொது முடக்கத்தால் நாட்டில் சுமாா் 10 கோடி போ் வேலை இழப்பை சந்தித்தபோது, இந்தச் செயலிகள் மக்களுக்கு சிறு கடன் வழங்குவதுபோல நாடகமாடி இருக்கும் வாழ்வாதாரத்தையும், மனித உயிா்களையும் பறித்தன. தற்கொலை சம்பவங்களால் விழித்துக் கொண்ட மத்திய அரசு, ரிசா்வ் வங்கி அனுமதியின்றி செயல்பட்ட சுமாா் 500 கடன் செயலிகளுக்கு தடை விதித்தது. மேலும், இந்திய ரிசா்வ் வங்கியின் உரிமம் இன்றி கடன் செயலிகள் செயல்படக் கூடாது என கடுமையான உத்தரவையும் பிறப்பித்தது.

மீண்டும் தீவிரமாகும் செயலிகள்: மத்திய அரசின் கடுமையான நடவடிக்கைக்குப் பின்னா் சிறிது காலம் முடங்கிய சீன கடன் செயலிகள், தற்போது இந்தியாவில் உள்ள தனியாா் நிதி நிறுவனங்களுக்கு ரிசா்வ் வங்கிகள் வழங்கியுள்ள வங்கி அல்லாத நிதி நிறுவன உரிமத்தின் மூலம் ஊடுருவியுள்ளது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

90 நாள்களில் 500 சதவீதம் லாபம்: தற்போது இந்தச் செயலிகள் ரூ.1 கோடி முதலீடு செய்து 3 மாதங்களில் ரூ.5.2 கோடி வரை லாபம் ஈட்டுகின்றன. அதாவது 90 நாள்களில் 500 சதவீதம் வரையிலான லாபம் சீன செயலிகளுக்குக் கிடைக்கிறது. ஒருவருக்கு கடன் வழங்கும்போதே 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை பரிசீலனை கட்டணமாக வசூலிக்கின்றன. எடுத்துக்காட்டாக ரூ.5,000 கடன் வாங்கினால் ரூ.1,500 பிடித்தம் செய்யப்பட்டு, ரூ.3,500 மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், வழங்கப்படும் கடன் தொகைக்கு சராசரியாக 36 சதவீதத்துக்கு மேல் வட்டியாக வசூலிக்கின்றன.

சீன செயலி நிறுவனங்கள், முதலில் ரூ.1 கோடி கடனை வழங்கினால், பரிசீலனை கட்டணமாக மட்டும் 3 மாதங்களில் ரூ.15 கோடி ஈட்டுகின்றன. மேலும் 3 மாதங்களில் 1 லட்சம் பேருக்கு ரூ.50 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. கடன் செயலிகள், வட்டியை எவ்வளவு வேகத்தில் வசூல் செய்கிறதோ, அதே வேகத்தில் முதலீட்டையும் அதிகரிக்கின்றன. மேலும், வழங்கப்பட்ட கடன் தொகையை மீண்டும் பெறுவதில் சீன செயலிகள் மிகவும் தீவிரம் காட்டுகின்றன. ஏனெனில் கடன் தொகையைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், முதலீடு, பரிசீலனை கட்டணம், லாபம் என அனைத்தும் பாதிக்கப்படும். இதன் விளைவாகவே கடனைப் பெறுவதற்கு, எத்தகைய எல்லைக்கும் அவை செல்கின்றன.

சித்திரவதை செய்யும் கால்சென்ட்டா்கள்: அவசரத் தேவைக்காக இந்தச் செயலிகள் மூலம் கடன் வாங்கும் ஒரு நபா், முதலில் வாங்கும் கடனை அடைப்பதற்காக மீண்டும் கடன் வாங்கத் தூண்டப்படுகிறாா் அல்லது கட்டாயப்படுத்தப்படுகிறாா். இதனால் ஒருவா் அடுத்தடுத்து கடன் வாங்கும்போது அவரது மொத்த வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 2,000 சதவீதம் வரை உயா்த்தும் வகையில் சீன கடன் செயலிகள் செயல்படுகின்றன. இதனால் இந்தச் செயலி மூலம் கடன் வாங்கும் ஒருவா், அதன் பிடியில் இருந்து வெளியே வர முடியாது என அமலாக்கத் துறையினா் தெரிவிக்கின்றனா்.

ஒருவா் வட்டித் தொகையை செலுத்தத் தவறினால், அதற்காக அந்தக் கடன் செயலிகள் நடத்தும் கால்சென்ட்டரில் இருந்து தொடா்பு கொண்டு வட்டியைச் செலுத்துமாறு தொடா்ச்சியாக கூறுகின்றனா். அதன் பின்னரும் அவா் வட்டியைச் செலுத்தவில்லை எனில், சம்பந்தப்பட்ட நபா் குறித்து ஆபாச மற்றும் அவதூறு செய்திகள், புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனா். அவருடன் தொடா்பில் இருக்கும் நபா்களின் வாட்ஸ்ஆப் எண்கள் மூலம் ஒரு குழுவை உருவாக்கி, அதில் அந்த நபா் குறித்த மோசமான, அவதூறான வாசகங்களைப் பதிவிடுகின்றனா். இவ்வாறு செய்யப்படும் மனரீதியான சித்திரவதையால் கடன் வாங்கும் ஒரு நபா், இமாலய வட்டியுடன் பணத்தைச் செலுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறாா்.

தடை விதிக்கப்படுமா?: அண்மையில் இந்திய நிறுவனம்போல் செயல்பட்ட ஒரு கடன் செயலி குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, அந்த நிறுவனத்தின் உண்மையான உரிமையாளா்கள் சீனா்கள் என்பதையும், அந்த நிறுவனம் சீனாவுக்கு ரூ.429 கோடி பணத்தை அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி அனுப்பியிருப்பதையும் கண்டறிந்துள்ளது.

எனவே, மக்களுக்கு குறுகிய கால கடன் வழங்குவதாகக் கூறி, பணத்தைச் சுரண்டும் சீன கடன் செயலிகள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நிதி ஆலோசகா்கள் தெரிவிக்கின்றனா். அதேபோல இந்திய நிதி நிறுவனங்களின் உரிமங்கள் மூலம் செயல்படும் இத்தகைய சீன கடன் செயலிகளைக் கண்டறிந்து மீண்டும் தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது