மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை! இந்த முறை உதயநிதி விழாவில்…(விடியோ)

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாகப் பாடப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

சென்னையில் முதலமைச்சர் புத்தாய்வுத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று(அக்.25) நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

விழாவின் தொடக்கத்தில் அங்குள்ள அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடினர். அப்போது, 'சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்' என்ற வரியில் 'கண்டமிதில்' என்பதற்குப் பதிலாக 'கண்டமதில்' என்று தவறாகப் பாடினர்.

இதையும் படிக்க | பிஞ்சுக் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சுவாசத் தொற்று! தீர்வு என்ன?

இதனைக் கவனித்த உதயநிதி, தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் சரியாகப் பாடுமாறு கூறியுள்ளார்.

இதனால் விழாவில் இரண்டாவது முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, 'எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!' என்ற வரியில் 'புகழ்மணக்க' என்பதை 'திகழ்மணக்க' என்று தவறாகப் பாடினர்.

இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதன்பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய உதயநிதி ஸ்டாலின், 'தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை. இது தொழில்நுட்பக் கோளாறு. மைக் சரியாக வேலை செய்யவில்லை. அவர்கள் பாடும்போது 2, 3 இடங்களில் குரல் சரியாக கேட்கவில்லை. இதனால் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடி இருக்கிறோம். அதன்பிறகு தேசிய கீதமும் ஒழுங்காகப் பாடப்பட்டிருக்கிறது. தேவையில்லாமல் மீண்டும் பிரச்னையை கிளப்பிவிட வேண்டாம்' என்றார்.

இதையும் படிக்க | ஆளுநர் பங்கேற்ற ஹிந்தி விழாவில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ சர்ச்சை!

முன்னதாக, ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இல்லாததால் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. ஆளுநரை முதல்வர் கடுமையாக விமரிசித்திருந்தார்.

இதனைவைத்து தமிழக பாஜகவினர் முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அரசை விமர்சித்து பேசி வருகின்றனர்.

மத்திய பாஜக இணையமைச்சர் எல். முருகன், 'முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு என்ன சொல்லப் போகிறார்? உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?