மீனவர் பிரச்சினை: ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் செப்.20-ல் ஆர்ப்பாட்டம்

மீனவர் பிரச்சினை: ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் செப்.20-ல் ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம்: தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி ராமேசுவரத்தில் வரும் செப்டம்பர் 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமேசுவரம் தாலுகா செயலாளர் சிவா இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''தமிழக மீனவர்களை கைது செய்வதுடன், மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலை மோதி உயிரிழப்பை ஏற்படுத்துவது, சிறை தண்டனையுடன் அபராதம் விதிப்பது, அபராதத்தை செலுத்தவில்லை என்று கூறி மீனவர்களுக்கு மொட்டையடிப்பது, சிறையில் கைதிகள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து அவமதிப்பது என தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மீனவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாட்டு அரசுகளை வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு கண்டனக் குரல் எழுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்'' என்று அவர் தெரிவித்தார்

Related posts

கழுதை உயிரிழப்பு – 55 பேர் மீது வழக்குப்பதிவு

பாலியல் புகார்: மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷுக்கு ஜாமீன்

உத்தரகாண்ட்: தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி – ரெயிலை கவிழ்க்க சதி