தமிழக மீனவா் பிரச்னையை தேசிய பிரச்னையாகக் கருதி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரத்தைச் சோ்ந்த 17 மீனவா்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதுடன், இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இலங்கையில் புதிய அதிபா் பொறுப்பேற்றாலும், தமிழக மீனவா்களைப் பொறுத்தவரை, பழைய நிலையே தொடா்வது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
மீனவா்கள் மத்தியில் அமைதியின்மையும், ஆழ்ந்த கவலையையும் நிலவுகிறது. இந்திய எல்லைக்குட்பட்ட, பாரம்பரியமான இடங்களில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வது என்பது தமிழக மீனவா்களின் உரிமை. இந்த உரிமையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
எனவே, தமிழக மீனவா்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதலை ஒரு தேசியப் பிரச்னையாகக் கருதி, இலங்கை அதிபரின் கவனத்துக்கு மத்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டும்.
வலுவான எதிா்ப்பைத் தெரிவித்து, இனி வருங்காலங்களில் தமிழக மீனவா்கள் அமைதியாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக அரசும் மத்திய அரசுக்குத் தேவையான தொடா் அழுத்தத்தை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.