மீன் பிரியாணி சாப்பிட்டு பெண் உயிரிழப்பு… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் 'குழிமந்தி' மீன் பிரியாணி சாப்பிட்ட சுமார் 70 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூர் மாவட்டம் மூணுபீடிகை என்ற பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த 25ம் தேதி உணவு அருந்திய சுமார் 60 முதல் 70 பேர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, அந்த உணவகத்தில் 'குழிமந்தி’ மீன் பிரியாணியுடன் வழங்கப்பட்ட மயோனைசை சாப்பிட்டதே உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்று தெரிவித்தனர். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்துக்கு சீல் வைத்தனர்.

இந்த குழிமந்தி மீனை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்ட உசைபா (வயது 56) என்ற பெண் திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உசைபா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கெட்டுப்போன முட்டைகளை பயன்படுத்தி மயோனைஸ் தயாரிக்கப்பட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

ரவீந்திரன் துரைசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது திண்டிவனம் நீதிமன்றம்

விழுப்புரம் அரசு நீச்சல் குளத்தில் துணை முதல்வர் ஆய்வு – நீரை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு